பதிவு செய்த நாள்
25
பிப்
2022
04:02
மனிதனுக்கு வாழ்வில் எத்தனையோ பிரச்னைகள். கோர்ட், கேஸ் பிரச்னை, கணவன், மனைவி பிரிவு, சொத்து தகராறு, கடன் தொல்லை இப்படி பல. இதற்காக பணமும் தண்ணீராக செலவழிவதோடு தீர்வு இல்லாமல் இழுபறி நீடிக்கும். இவற்றுக்கு எல்லாம் முடிவு கட்டுபவராக கேரளாவிலுள்ள வைக்கம் மகாதேவர் இருக்கிறார். அல்லல் போக்கும் மாசி மாத தேய்பிறை அஷ்டமி நாளில் (பிப்.24) இவரை தரிசிப்பது சிறப்பு.
கரன் என்னும் அசுரன் சிவனை நோக்கி தவமிருந்தான். மனம் மகிழ்ந்த சிவன் மூன்று லிங்கங்களைக் கொடுத்து பூஜிக்க உத்தரவிட்டார். அவற்றை வலது கையில் ஒன்றும், இடது கையில் ஒன்றும், வாயில் ஒன்றுமாக எடுத்துச் சென்றான். வலக்கையில் இந்த லிங்கத்தை வியாக்ரபாத முனிவரிடம் கொடுக்க, அவர் வைக்கம் என்னும் இத்தலத்தில் பிரதிஷ்டை செய்தார். அதன் பலனாக கார்த்திகை தேய்பிறை அஷ்டமியில் சிவன் காட்சியளித்து இந்த நன்னாளில் இங்கு வருவோரின் விருப்பம் நிறைவேறும் என வரமளித்தார். இந்த விழாவே வைக்கத்தஷ்டமி எனப்படுகிறது. வைக்கம் என்னும் இத்தலத்தில் மகாதேவராக சிவன் அருள்புரிகிறார்.
கருவறையில் 2 அடி உயர பீடத்தில் 4 அடி உயர சிவலிங்கம் உள்ளது. அம்மன் சிலை கிடையாது. கோயில் பின்புறம் உள்ள விளக்கில் எண்ணெய் ஊற்றி வழிபட்டால் பார்வதியை வழிபட்ட பலன் கிடைக்கும்.
கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமியில் அதிகாலை 4:00 முதல் 8:00 மணி வரை வழிபடுவது சிறப்பு. இந்த நேரத்தில் தான் வியாக்ரபாதருக்கு சிவன் தரிசனம் தந்ததாகச் சொல்வர். இந்நாளில் லிங்கத்தின் மீது சூரியனின் கதிர்கள் பட்டு சூரிய பூஜை நடத்தப்படும். சூரபத்மன், தாரகாசுரனை வதம் செய்து முருகன் வெற்றி பெற, வைக்கத்தஷ்டமியன்று சிவனே இங்கு அன்னதானம் செய்ததாக தலபுராணம் கூறுகிறது. இதனடிப்படையில் இங்கு அன்னதானம் செய்ய நினைத்தது நிறைவேறும். அன்னதானத்தில் சிவன், பார்வதியும் பங்கேற்பதாக ஐதீகம். அன்னதானம் செய்ய நிர்வாகத்தினரிடம் பணம் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும்.
கார்த்திகை அஷ்டமியை ஒட்டி திருவிழா 13 நாள் நடக்கிறது. மாசி மாத அஷ்டமியிலும் சிறப்பு பூஜை நடக்கும். இது தவிர பிரதோஷம், மாதசிவராத்திரியன்று பூஜை நடக்கும். அம்மன் சன்னதி இல்லாவிட்டாலும் 12 ஆண்டுக்கு ஒருமுறை 12 நாள் தொடர்ந்து தேவி வழிபாடு செய்யப்படுகிறது. கரன் தன் இடது கையில் வைத்த லிங்கத்தை ஏற்றமானுவரில் மேற்கு நோக்கியும், வாயில் இருந்த லிங்கத்தை கடித்துருத்தியில் கிழக்கு நோக்கியும் பிரதிஷ்டை செய்து வழிபட்டான்.
எப்படி செல்வது
* எர்ணாகுளத்திலிருந்து 34 கி.மீ.,
* கோட்டயத்திலிருந்து 42 கி.மீ.,