பதிவு செய்த நாள்
01
மார்
2022
12:03
சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவில் சிற்றம்பல மேடை மீது ஏறி தேவாரம், திருவாசகம் பாட வந்த தெய்வத் தமிழ் பேரவையைச் சேர்ந்த 76 பேரை, போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், பெண் பக்தரை தாக்கிய தீட்சிதரை கைது செய்யவும், சிற்றம்பல மேடையில் ஏறி தரிசனம் செய்ய அனுமதிக்க கோரியும், அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில், நடராஜர் கோவில் சிற்றம்பலத்தில், தொடர்ந்து ஆறு நாட்கள் தேவாரம் பாடி வழிபடப் போவதாக, தெய்வத் தமிழ் பேரவை அறிவித்தது. நேற்று காலை செயலர் வெங்கட்ராமன், ஒருங்கிணைப்பாளர் மணியரசன், தேனி மாவட்டம் ராஜயோக சித்தர் பீடம் வடகுரு மடாதிபதி குச்சனுார் கிழார் தலைமையில் 17 பெண்கள் உட்பட, 76 பேர் சிதம்பரம் கீழ வீதிக்கு வந்தனர். கடலுார் ஏ.டி.எஸ்.பி., அசோக்குமார், டி.எஸ்.பி.,க்கள் ரமேஷ்ராஜ், ஆரோக்கியராஜ் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார், கீழ வீதி வாயிலில் இரும்பு தடுப்பால் தடுத்தனர்.இதையடுத்து, சாலையில் அமர்ந்து தேவாரம், திருவாசகம் பாடினர். ஒரு மணி நேரத்திற்கு பின் 76 பேரை போலீசார் கைது செய்தனர். வேனில் ஏற மறுத்த சிலரை போலீசார் குண்டுக்கட்டாக துாக்கிச் சென்று கைது செய்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, அங்கு பரபரப்பு நிலவியது.