பதிவு செய்த நாள்
04
மார்
2022
10:03
சென்னை : ஆடை கட்டுப்பாடு உள்ள கோவில்களில், அறிவிப்பு பலகை வைக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், முறையான ஆடை அணிந்து வரும்படியும் அறிவுறுத்தி உள்ளது.
திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தாக்கல் செய்த மனு:ஹிந்து கோவில்களுக்குள், ஹிந்து மதத்தைச் சேராதவர்கள் நுழையக் கூடாது. கோவிலுக்கு வருவதற்கு ஆடை கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், ஹிந்து மதத்தைச் சேராதவர்கள் கோவிலுக்குள் வருகின்றனர். அவர்களின் மத வழக்கப்படியான ஆடைகளை அணிந்து வருகின்றனர். கோவிலுக்குள் லுங்கி, அரைக்கால் சட்டை அணிந்து பலர் வருகின்றனர். எனவே, ஹிந்து அல்லாதவர்கள் கோவில்களுக்குள் நுழைய அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பலகையை, நுழைவு வாயிலில் வைக்க வேண்டும். ஆடை கட்டுப்பாட்டையும் குறிப்பிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய, முதல் பெஞ்ச் முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜரானார். இருதரப்பு வாதங்களுக்கு பின், அனைத்து கோவில்களுக்கும் என பொதுவாக உத்தரவு பிறப்பிக்க மறுத்த முதல் பெஞ்ச், ஆடை கட்டுப்பாடு உள்ள கோவில்களில், அறிவிப்பு பலகை வைக்க உத்தரவிட்டது. பக்தர்கள், கோவிலுக்கு வரும்போது முறையான ஆடையை அணிந்து வர வேண்டும்; இதை கோவில் நிர்வாகங்கள் ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் முதல் பெஞ்ச் அறிவுறுத்தியது. கோவில்களுக்குள் உணவகங்கள் இயங்கவும், வாகனங்கள் உள்ளே வரவும் எதிர்ப்பு தெரிவித்த வழக்கில், அரசு தரப்பில் பதில் அளிக்க, இரண்டு வாரம் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.