மானாமதுரை பங்குனி பொங்கல் விழா: தீச்சட்டி தயாரிக்கும் பணி மும்முரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மார் 2022 03:03
மானாமதுரை: மானாமதுரையில் அம்மன் கோயில்களில் நடைபெற உள்ள பங்குனி பொங்கல் திருவிழாவிற்காக தீச்சட்டிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மானாமதுரையில் 250க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் வருடந் தோறும் சீசனுக்கு தகுந்தாற்போல் மண்பாண்ட பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றனர். இவற்றை தமிழகம் மற்றும் வெளி மாநிலங்கள்,வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் வாங்கிச் சென்று வருகின்றனர்.இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் நடைபெறாமல் இருந்த பங்குனி பொங்கல் விழா இந்தாண்டு சிறப்பாக நடைபெற உள்ளதையடுத்து மானாமதுரையில் தீச்சட்டிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தீச்சட்டிகள் உற்பத்தி செய்யும் மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில்,
வருகிற பங்குனி மாதம் தமிழகத்தில் உள்ள திண்டுக்கல்,மதுரை,நத்தம், அருப்புக்கோட்டை, திருச்சுழி, தாயமங்கலம், காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள அம்மன் கோயில்களில் நடைபெறும் பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி எடுப்பது வழக்கம்.அந்த தீச்சட்டி கள் மானாமதுரையில் தற்போது உறுதியாகவும் கலைநயத்தோடும் தயாரிக்கப்பட்டு வருகிறது.தீச்சட்டிகள் ரூ.40 முதல் ரூ.150 வரை விற்பனையாகின்றன.இதில் 3,5,9,11 முகங்கள் கொண்ட தீச்சட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.தமிழகம் முழுவதும் உள்ள வியாபாரிகள் வர இருக்கின்ற பங்குனி பொங்கல் திருவிழாவிற்காக அதிக அளவில் தீச்சட்டிகள் செய்ய ஆர்டர் கொடுத்துள்ளதாக கூறினர்.