பதிவு செய்த நாள்
08
மார்
2022
10:03
முருகனை வழிபட, செவ்வாய்க்கிழமை, சஷ்டி, கார்த்திகை உகந்த நாள். இந்த 3ம் இன்று ஒரே நாளில் அமைவது மிகவும் சிறப்பு. இன்று முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. வீட்டில் வழிபடுவதை விட இன்று கோயிலில் முருகப்பெருமானை மனமுருகி வழிபட்டால் அனைத்தும் கிடைக்கும்.
கடவுளின் பெயரைச் சொல்வதால் மனமும் முகமும் மலரும். ஆனந்தம் பெருகும். முருகனை நினைத்து நினைத்து அவனது பெயர்களை உள்ளம் நெகிழ்ந்து உருகிச் சொன்னால் ஆறுமுகக்கடவுள் தன் பன்னிரண்டு கரங்களினால் நாம் வேண்டிய வரங்களை எல்லாம் வள்ளல் போல் அள்ளித் தருவான். சரவணபவன், முருகன், குமரன், கந்தன், குகன், வேலாயுதம், மயில்வாகனன், சேவல்கொடியோன் என்ற திருநாமங்கள் அடியார்களால் சொல்லப்படுபவை. இதில் சரவணபவ என்னும் ஆறெழுத்து மந்திரம் மிகவும் சிறப்பானது. இதனை மனமுருகி சொல்பவர்கள் செல்வம், கல்வி, முக்தி (பிறப்பற்ற நிலை), எதிரிகளை வெல்லுதல், ஆரோக்கியம், பயமின்றி இருத்தல் ஆகிய ஆறு பேறுகளையும் பெற்று மகிழ்வார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. சரவணன் என்றால் பொய்கையில் நாணல் புல்களுக்கு மத்தியில் தோன்றியவன் என்று பெயர். முருக வழிபாட்டிற்கு உகந்த நாளான இன்று முருகன் கோயில்களில் ஆறெழுத்து மந்திரத்தை கூறி வழிபடுவோர்க்கு ஆறுமுகக்கடவுளான முருகப்பெருமானின் அருளால் வழிபட்டால் நம் வாழ்க்கையில் ஏறுமுகத்தை காணமுடியும்.