பேரூர்: பேரூர் பட்டீசுவரர் கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கோவை அருகே பேரூரில் பிரசித்தி பெற்ற பட்டீசுவரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுக்கொருமுறை நாற்று நடும் விழா ஆனி மாதத்தில் கிருத்திகை தொடங்கி பூராட நட்சத்திரத்தில் நாற்று நடவும், உத்திரத்தில் திருமஞ்சனமும் சிறப்பாக நடைபெறும். இந்த கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நேற்று (9ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 6.30 மணிக்கு பட்டி விநாயகர் கோவிலில் இருந்து, புற்றுமண் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, நவதானியங்களை வைத்து முளைப்பாலிகையிடுதல் நடந்தது. இதையடுத்து 8 மணிக்கு காலசந்தி பூஜை செய்யப்பட்டு விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக வழிபாடுகளை தொடர்ந்து, கொடியேற்றம் நடந்தது. பின் 8 மணிக்கு மேல் அஷ்ட பலி பீடங்களுக்கு காப்புக்கட்டுதல் நடைபெற்றது. தொடர்ந்து வேதம், திருப்பாராயணம் பாடப்பட்டு பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடந்தது.
விழாவில் வரும் 14ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 15ம் தேதி திருத்தேரோட்டமும், 17ம் தேதி தெப்ப உற்சவம், 18ம் தேதி பங்குனி உத்திர தரிசனமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் கா.விமலா தலைமையிலான திருப்பணி ஊழியர்கள் செய்து வருகின்றனர்.