ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் தங்கும் விடுதி பயன்பாடின்றி முடங்கி கிடப்பதால், கட்டடம் பலவீனமாகி பல லட்சம் ரூபாய் வீணாகும் அபாயம் உள்ளது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் தனியார் லாட்ஜில் தங்குவதால் கூடுதல் செலவீனம் ஏற்பட்டது. இதனால் பக்தர்களுக்காக லோ பட்ஜெட்டில் கோயில் கிழக்கு ரத வீதியில் 6 ஆண்டுக்கு முன் 20 அறையுடன் சேது இல்லம் எனும் தங்கும் விடுதி அமைத்தனர். இந்நிலையில் சில மாதம் முன் கோயில் நிர்வாகம் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் 98 அறைகளுடன் தங்கும் விடுதி அமைத்தது. இதனால் சேது இல்லம் வாடகைக்கு விடாமல் மூடியதால் பராமரிப்பின்றி தூசிகள் படிந்து பாழடைந்த கட்டிடம் போல் காட்சியளிக்கிறது. நாளடைவில் இக்கட்டடம் பலவீனமாகி பல லட்சம் ரூபாய் வீணாகும் அபாயம் உள்ளது. எனவே சேது இல்ல அறையை வாடகைக்கு வழங்கி கட்டடத்தை பராமரிக்க, ஹிந்து அறநிலைதுறை ஆணையர் உத்தரவிட வேண்டும்.