ராமேஸ்வரம்: கச்சத்தீவு அந்தோணியார் சர்ச்சில் இன்றும் நாளையும் (மார்ச் 11, 12) நடக்கும் திருவிழாவில் பங்கேற்க ராமேஸ்வரத்தில் இருந்து 4 படகில் 80 பக்தர்கள் செல்கின்றனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து 25 கி.மீ., துாரத்தில் பாக்ஜலசந்தி கடலில் அமைந்துள்ள கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழா இரண்டு நாட்கள் நடக்கிறது. இவ்விழாவில் இரு நாட்டு பக்தர்கள் தலா 50 பேர் மட்டும் பங்கேற்க இலங்கை அரசு அனுமதித்தது.இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியதையடுத்து இரு நாட்டிலுமிருந்து கூடுதலாக 100 பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. இதனால் இன்று காலை 9:00 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து 3 விசைப்படகுகள், ஒரு நாட்டு படகில் பாதிரியார் தேவசகாயம், மீனவர்கள் உள்ளிட்ட 80 பக்தர்கள் கச்சத்தீவு செல்கின்றனர். இவர்கள் இன்று மாலை கச்சத்தீவில் நடக்கும் சிலுவை பாதை பூஜை , நாளை காலை நடக்கும் சிறப்பு திருப்பலியில் பங்கேற்பர். பின் அங்கிருந்து மதியம் 12:00 மணிக்கு பின் ராமேஸ்வரம் வருவர்.