திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் பங்குனி பிரம்மோற்சவ விழாவின் 2ம் நாளான இன்று பெருமாள் யாளி வாகனத்தில் வீதி உலா நடந்தது.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் இரண்டாம் நாளான இன்று காலை 8:00 மணிக்கு தேகளீச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் யாளி வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. 10:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் சேவையில் அருள்பாலித்தார். இரவு 8:30 மணிக்கு சிம்ம வாகனத்தில் வாணவேடிக்கையுடன் வீதிஉலா நடந்தது. ஸ்ரீதேகளீச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் நிர்வாகத்தினர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.