பதிவு செய்த நாள்
18
மார்
2022
09:03
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பவுர்ணமி கிரிவலத்திற்கு தடை நீக்கப்பட்டதால், பக்தர்கள் ஆர்வமுடன் கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலையிலுள்ள மலையையே பக்தர்கள் சிவனாக வழிபட்டு வருகின்றனர். இதனால், பவுர்ணமி தோறும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள், 14 கி.மீ., துாரம் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து செல்வர். கொரோனா ஊரடங்கால், கடந்த, 2020 மார்ச் முதல், 2022 பிப்., வரை பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது, கொரோனா தொற்று குறைந்ததையடுத்து, கொரோனா ஊரடங்கு தடை நீக்கப்பட்டு, பங்குனி மாத பவுர்ணமி கிரிவலத்திற்கு அனுமதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. பவுர்ணமி திதி நேற்று மதியம், 2:10 மணி முதல், இன்று மதியம், 1:48 வரை உள்ளது. இதையடுத்து, பக்தர்கள் நேற்று ஆர்வமுடன் கிரிவலம் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.