மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி மாதப் பெருவிழா, கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் 10ம் நாளான நேற்று, திருக்கல்யாண வைபவம் நடந்தது. நேற்று காலை , திருக்கூத்த பெருமான் திருக்காட்சி, ஐந்திருமேனிகள் விழா நடந்தது தொடர்ந்து, தீர்த்தவாரி நடந்தன. மாலை 6:00 மணிக்கு, புன்னை மரத்தடியில் உமாதேவியார் மயிலுருவுடன், மாதேவரை வழிபடல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து, உற்சவர் கபாலீஸ்வரர் – கற்பகாம்பாள் திருமணவை பவம், நேற்று மாலை துவங்கியது. இருவரும் சிறப்பு அலங்காரத்துடன் காட்சிஅளித்தனர். பின், சனீஸ்வரர் சன்னதி அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில், தம்பதி சமேதராக கபாலீஸ்வரர் எழுந்தருளினார். திருமணசம்பிரதாய சடங்குகள் முடித்த பின், கபாலீஸ்வரர் கற்பகாம்பாளை மணம் புரிந்து, பக்தர்களுக்கு மணக்கோலத்தில் அருள்பாலித்தார். இவ்விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதையடுத்து, கைலாய ஊர்த்தி நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து, கொடி இறக்கத்துடன் பங்குனி விழா நிறைவடைந்தது. இன்று பந்தம் பறி விழாவும், நாளை விடையாற்றி விழாவும் நடக்கிறது.