பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி விழாவையொட்டி அம்மன் சர்வ அலங்காரத்தில் மின் தீப தேரில் வலம் வந்தார். தொடர்ந்து நேற்று நாள் முழுவதும் பக்தர்கள் தீச்சட்டி எடுத்து நேர்த்தி கடனை செலுத்தினர்.
இக்கோயிலில் மார்ச் 11 ல் கொடியேற்றத்துடன் பங்குனி விழா துவங்கியது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி வலம் வந்தார். நேற்று காலை 6:00 மணி தொடங்கி மாலை 6:00 மணிவரை நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி எடுத்து தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர். அப்போது கேரள கலைஞர்கள் சுவாமி வேடம் அணிந்து சென்றனர். மேலும் இரவு 8:00 மணிக்கு முத்தாலம்மன் சர்வ அலங்காரத்துடன் மின் தீப தேரில் அமர்ந்தார். பின்னர் சிறப்பு தீபாராதனைகள் நடந்து, அம்மன் தேர் நான்கு மாடவீதிகளில் பக்தர்களின் ஓம் சக்தி, பராசக்தி கோஷம் முழங்க ஆடி அசைந்து சென்றது. பக்தர்கள் தீவட்டிகள் ஏந்தி, மேளதாளங்களுடன், வானவேடிக்கைகளுக்கு மத்தியில் தேர் நிலையை அடைந்தது. பின்னர் அம்மன் தேரிலிருந்து இறங்கி, கோயில் பிரகாரத்தில் வலம் வந்து தனது இருப்பிடத்தை அடைந்தார். கோயில் பிரகாரங்கள் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். நாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் எடுக்க உள்ளனர். ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை டிரஸ்டிகள், ஆயிரவைசிய சபையினர் செய்திருந்தனர்.