அல்லாளபுரம் ஈஸ்வரன் கோவில் ஆவணியில் கும்பாபிஷேகம்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மார் 2022 02:03
பல்லடம்: அல்லாலபுரம் உலகேஸ்வர சுவாமி கோவில், வரும் ஆவணி மாதம் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பல்லடம் அடுத்த, அல்லாளபுரத்தில் உண்ணாமுலையம்மன் ஸ்ரீஉலகேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் கோவில் சிதிலமடைந்து இருந்தது. பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, 2018ல் பாலாலய கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு திருப்பணிகள் துவங்கின. அல்லாலபுரம் ஈஸ்வரன் கோவில், பெருமாள், மற்றும் கரியகாளியம்மன் கோவில் உள்ளிட்டவை ஒரே காலங்களில் கட்டப்பட்ட பழமையான கோவில்களாகும். பெருமாள் கோவில் மூன்றாண்டுக்கு முன் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஈஸ்வரன், மற்றும் கரியகாளியம்மன் கோவில்களில் கடந்த, 3 ஆண்டுகளாக புனரமைப்பு பணிகள் நடந்து வந்தன. தற்போது பணிகள் முடிந்து கும்பாபிஷேகத்துக்கு தயாராக உள்ளது. அறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ள சூழலில். வரும் ஆவணி மாதம் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களே உள்ளதால், கும்பாபிஷேக நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.