பதிவு செய்த நாள்
24
மார்
2022
12:03
மதுரை : பிற உயிரினங்களையும் தன்னுயிராக கருதியவர் மஹாபெரியவர் என இந்திரா செளந்தர்ராஜன் பேசினார்.மதுரை ஸ்ரீகாஞ்சி காமகோடி மடத்தில் மஹா பெரியவரின் ஜன்ம நட்சத்திரமான அனுஷ வைபவம் நேற்று நடந்தது. ஸ்ரீ மஹாபெரியவா விக்ரகத்திற்கு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் நடைபெற்றன.குருமஹிமை எனும் தலைப்பில் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் பேசியதாவது:மஹாபெரியவர் தலைசிறந்த சன்னியாசியாகவும், வேதங்களை காத்திடும் மடாதிபதியாகவும் உலகிற்கே முன்னுதாரணமாக திகழ்ந்தார்.
அத்வைதியாக இருந்தபோதிலும், வைணவர்கள், பிறமதத்தவர்களும் அவர்பால் பக்தியும் மரியாதையும் கொண்டிருந்தனர்.ஒரு ஊரில் அவர் முகாமிட்டிருந்தபோது நாய்கள் குரைக்கும் சப்தம் கேட்டது. சீடர்களிடம் ஏன் என கேட்டதும், மடத்தில் இருந்து வெளியே போட்ட எச்சில் இலைகளுக்காக அவை சண்டையிட்டுக்கொள்கின்றன என்றனர்.நாளை முதல் அவற்றிற்கு உணவு அளித்துவிட்டு பிறகே நாம் சாப்பிட வேண்டும். அவை மனிதர்களை நம்பியே உள்ளன. அவற்றிற்கு ஆகார பங்கம் கூடாது என்றார். மறுநாள் குரைப்புச் சப்தம் கேட்கவில்லை. அவை பசியாறி விட்டது தெரிந்தது. இப்படி பிற உயிரினங்களையும் தன்னுயிர் போல கருதியவர் பெரியவர். இன்றும் அவர் சூட்சம வடிவில் நமக்கெல்லாம் அருள் பாலிக்கிறார். இவ்வாறு இந்திரா சௌந்தர்ராஜன் பேசினார்.மடத்தின் தலைவர் டாக்டர் ராமசுப்ரமணியம், செயலாளர் சுந்தர், பொருளாளர் ஸ்ரீ குமார், சுப்பிரமணியன், வெங்கட ரமணி, வெங்கடேசன், சீனிவாசன், ராதாகிருஷ்ணன், ஸ்ரீராம், சந்திரன், ஜோதி வேல், சங்கரராமன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.