பதிவு செய்த நாள்
24
மார்
2022
12:03
காரைக்கால்: காரைக்காலில் பொய்யாதமூர்த்தி விநாயகர் கோவில் மண்டபத்தை இடிக்கும் உத்தரவை நீதிமன்றம் மறு பரிசீலனை செய்யக் கோரி, கடை அடைப்பு போராட்டம் நடந்தது.காரைக்கால் கைலாசநாதர் சுவாமி கோவிலுக்கு சொந்தமான பொய்யாத மூர்த்தி விநாயகர் கோவில், மாதா கோவில் வீதியில் உள்ளது. இக்கோவிலுக்கு, ரூ.25 லட்சம் மதிப்பில் முகப்பு மண்டபம் கட்டும் பணி கடந்த டிசம்பர் 8ம் தேதி துவங்கியது. சாலையை ஆக்கிரமித்து மண்டபம் கட்டுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதை விசாரித்த நீதிமன்றம், அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கோவில் மண்டபத்தை இடிக்க வேண்டும். இப்பணியை வரும் 28ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என, கடந்த 18ம் தேதி உத்தரவிட்டது.நீதிமன்ற உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, இந்து முன்னணி, பா.ஜ., சார்பில் நேற்று புதிய பஸ் நிலையத்தில் இருந்து மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.இந்து முன்னணி மாவட்ட தலைவர் கணேஷ், பா.ஜ., மாவட்ட தலைவர் துரைசேனாதிபதி தலைமை தாங்கினர்.இந்த கோரிக்கையை வலியுறுத்தி, கடைகளும் மூடப்பட்டன.பாரதியார் சாலை, திருநள்ளார் சாலை, காமராஜர் சாலை, புது பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப் பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.அரசு அலுவல் காரணமாக நேற்று காரைக்காலில் இருந்த கவர்னர் தமிழிசையை பா.ஜ.வினர் சந்தித்து, நீதிமன்ற உத்தரவை மறு பரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி, மனு அளித்தனர்.