ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சனி, ஞாயிறு நாளில் ஒரு லட்சம் பக்தர்கள் தரிசிப்பதாக கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர். கொரோனா ஊரடங்கு முன் கோயிலில் 50 செக்யூரிட்டி காவலர்கள் பணிபுரிந்த நிலையில், தற்போது 9 முன்னாள் ராணுவ வீரர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் நேற்று ஏராளமான பக்தர்கள் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மனை தரிசிக்க முதல் பிரகாரத்தில் நீண்ட வரிசையில் முண்டியடித்து காத்திருந்தனர். இக்கூட்டத்தை ஒழுங்குபடுத்தி, பக்தர்களை பாதுகாப்பாக வழியனுப்பிட கோயில் அதிகாரிகள், கோயில் ஊழியர்கள், செக்யூரிட்டி காவலர்கள் இல்லாததால், கூட்ட நெரிசலில் பக்தர்கள் சிக்கி அவதிப்பட்டனர். மேலும் வயது மூத்த பக்தர்கள், குழந்தைகள் கால் வலியில் அவதிப்பட்டு சுவாமி, அம்மன் சன்னதிக்கு வரிசையில் நின்று செல்வதை தவிர்த்து, வெளியில் நின்றபடி தரிசித்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். எனவே பக்தர்கள் மனநிறைவுடன் தரிசிக்க கூடுதலாக செக்யூரிட்டி காவலர்களை நியமிக்க ஹிந்து அறநிலைதுறை ஆணையர் உத்தரவிட வேண்டும்.