பதிவு செய்த நாள்
29
மார்
2022
11:03
தங்கநகைகளை அணிந்து கொள்ளயாருக்குத் தான் ஆசையில்லை? நகை இல்லாதவர்கள் கூட நன்கு சிரித்தால் அது புன்னகை ஆகிவிடுகிறது. அவன் மனது சொக்கத்தங்கம் என்கிறோம். தங்கத்திற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
ஹிரண்மயேனபாத்ரேணஸத்யஸ்யாபிஹிதம்முகம் |
தத்வம்பூஷன்அபாவ்ருணுஸத்யதர்மாயத்ருஷ்டயே ||
- ஈசாவாஸ்யோபநிஷத்-15
சூரியனே! பொன்மயமானவட்டிலால்சத்தியத்தின்முகம்மறைக்கப்பட்டுள்ளது. சத்தியத்தை நாடும் எனது பார்வைக்கு நீ அந்த மறைப்பை நீக்கி அருள் என்று ஒரு ரிஷிபரம் பொருளிடம் பிரார்த்திக்கிறார். பிரம்மத்தை மறைத்திருக்கும் வட்டினைப்பொன்மயமான - ஹிரண்மயமான ஒன்று என்றுகுறிப்பிடுகிறது ஈசாவாஸ்ய உபநிஷதம். ஆக, தங்கம்தெய்வம் போன்றது. பரம்பொருளான பிரம்மத்தை ஓரளவிற்கு அறிந்து கொள்வதற்குத் தங்கத்தை ஆன்மிகமயமாகப்புரிந்து கொள்வோம்; ஆசைமயமாக அல்ல. பிரம்மமயம் என்பது ஹிரண்ய மயம் ஆகும். தங்கச்சுரங்கம் ஒருநாட்டின் பெரும் சொத்து. சுரங்கத்தில் தங்கம் குவிந்து கிடக்கும். அதை வெட்டி எடுப்பார்கள். வெட்டப்பட்டதைச்சுத்தம் செய்துஅதைத்தங்க பிஸ்கட்டுகள் ஆக்குவார்கள். அந்தத்தங்க பிஸ்கட்டுகளின் ஒரு சிறுகூறு நமக்குக் கிடைத்தால் நாம் எவ்வளவு மகிழ்ச்சி அடைவோம்! நாம் பெற்ற அந்தச்சிறுதங்கக்கூறு நல்ல விலையுள்ள உயர் ரகம் வாய்ந்தது என்று தெரிந்தால் நம் சந்தோஷம் குறைவாகவா இருக்கும்? நமக்குள் உள்ள அந்தத்தங்கத்தின் ஒளி பளபளக்கிறது. அதனால் நமக்குப்பெருமையும் வருகிறது என்றால், நாம்பெறும் சுகத்தையும்அந்தஸ்தையும் அளவிடமுடியுமா? அந்தத்தங்கத்தை வைத்து விதவிதமான நகைகளைச்செய்து அணிந்து கொண்டால் அதுஎவ்வாறுஇருக்கும்! கற்பனையே உங்களை குதூகலிக்கச் செய்கிறதென்றால், உண்மையில் நீங்கள் ஒவ்வொருவரும் தங்கமகன் / தங்கமகள் என்பது உங்களுக்குப்புரிந்தால் எவ்வளவு பேரானந்தம் பெறுவீர்கள்! ஒருகணம் புறத்திலுள்ள நகைகளை தெய்விகக்கண்ணோட்டத்துடன் காணுங்கள்.
1.தங்கச்சுரங்கம் = பரம்பொருளான பிரம்மம். பிரம்மம்யாரும் அறியப்படாத நிலையில் கண்டறியப்படாத சுரங்கம் போல் இருக்கிறது.
2. வெட்டப்படும் தங்கச்சுரங்கம் = பிரம்மம் ஜகத்தின் தோற்றத்திற்குக்காரணமான ஈஸ்வரன். பரபிரம்மம்பிரம்மா - விஷ்ணு - மகேஸ்வரன்ஆகியமும்மூர்த்திகளையும்படைத்தது. ஜகத்தைசிருஷ்டிக்கும் பொறுப்பை பிரம்மாவிடம் ஒப்படைத்தது. பாதுகாக்கும் பணியை விஷ்ணுவிடமும், பணி முடிந்த பிறகு ஜகத்தை ஒடுக்கும் பணியினை மகேஸ்வரரிடமும் பிரம்மம் ஒப்படைத்தது.
3. சுத்திகரிக்கப்பட்ட தங்கம் தங்கபிஸ்கட் ஆகிறது = ஜகத்நியாமகாரரான ஈஸ்வரன் சுத்திகரிக்கப்படாத தங்கம்பயன் படாது. அதுபோல் பிரம்மம்ஜகத்தை நன்கு நியமனம் செய்வதற்காக அடுத்தநிலைக்கு தன்னைமாற்றிக்கொண்டது. மும்மூர்த்திகளின் பணியினை இன்னும் துல்லியமாக நியமனம் செய்வதற்கு இந்திரன், வாயு, வருணன், அக்னி, சூரிய - சந்திரர்கள்என்றுபிரம்மம்படைத்தது. தங்கம், சுரங்கத்தில்இருந்தாலோஅல்லது கட்டியாக இருந்தாலோஅல்லது தங்கபிஸ்கட்டுகளாக மாறினாலோ - அதனால் மனிதனுக்குப் பெரும் பயன் என்ன உள்ளது?
4. தங்க பிஸ்கட் மனிதர்களைக்கட்டுப்படுத்துகிறது = பரம்பொருள் ஜீவனின் நன்மை தீமைகளை நிர்ணயிக்கிறது! பிரம்மம் உலகில் ஜீவர்களைப்படைத்துப் பரிபாலிக்கிறது. அந்தப்பரிபாலனம் அதற்குரிய தெய்விகச்சட்ட திட்டங்களுடன், விதிமுறைகளின் படி அமைகிறது. மனிதன் செய்யும் வினைகளுக்கு ஏற்ப பிரம்மம் கர்மபலதாதா என்ற நிலையில் நின்றுமக்களை நெறிப்படுத்துகிறது. கர்மபலதாதா, விதி அல்லது தெய்வம் ஆகிய பெயர்களில் நின்று மக்களையும் ஜகத்தையும் நிர்வகிக்கிறது. ஜீவனின் நல்வினைகளுக்கு ஏற்ப மகிழ்ச்சியையும் நல்லவாய்ப்புகளையும் பிரம்மத்தின் சக்திகர்மபலதாதாவாக இருந்து வழங்குகிறது. தீமை செய்தால் தீயவினைகளுக்கு ஜீவன் உட்படுகிறான். இங்கு கர்மபலதாதா ஒரு கண்டிப்பான நீதிபதியாக விளங்கு கிறார்.
கருணைக்கும் சிபாரிசுக்கும் அவரிடம் இடமில்லை; விதியின் படி தான் செயல்படுகிறார். பிரம்மம் வனுக்கு எட்டாத நிலையில் மட்டுமேஇருந்தாலும் அல்லது ஜகத்தைப்படைத்து காத்துஅழிக்கும் ஜகத்காரணனான ஈஸ்வரனாக அல்லது ஜகத்நியா மகாரனான ஈஸ்வரனாக இருந்தாலும் பக்தர்களுக்குப் பயன்படா விட்டால் அந்த ஈஸ்வரனுக்குத் திருப்தி உண்டாகுமா? சிருஷ்டிக்கு அர்த்தம் இருக்குமா? பிரபஞ்சம் இயங்குமா? 5.பிரம்ம அம்சம் ஜீவனின் ஆன்மா = தங்கத்தைப்பெற்ற மனிதன் பிரம்மம் தன் படைப்பைத் தனது அம்சத்துடன் கண்டு ஆனந்தம் அடைய விரும்புகிறது. ஆதலால் கட்டித்தங்கத்தின் ஒரு துகளாவது ஜீவனுக்குள் வரவேண்டும். ஜீவனைப்படைக் கும் போது பிரம்மம் அவனுக்குள் ஆத்மாஎன்ற அம்சத்துடன் புகுகிறது. உயர்ந்த பரம்பொருள் ஜீவனை மீண்டும் தெய்விகமாக ஆக்குவதில் உள்ள வாய்ப்பை பிரம்மமே வழங்குகிறது.
ஆன்மா ஜீவனுக்குள் இருந்து செயல்பட்டு உலககாரியங்களில் ஈடுபடுவதற்காக உயிர், சிந்திக்கும் திறனானசைதன்யம், மனம், கர்ம மற்றும் ஞானேந்திரியங்கள், உடல் ஆகியவற்றைக்கொண்டு உலகவாழ்க்கையில் பிரம்மமே ஜீவனை ஈடுபடுத்துகிறது. தங்கத்துகள் அதாவது பிரம்மத்தின் ஒருகூறுஒவ்வோர் இதயத்திலும் உறைந்திருக்கிறது என்ற சத்தியத்தை ஒவ்வோர் ஆத்மாவிடமும் அளவற்ற சக்திஉண்டு என்ற வாக்கியத்தின் மூலம் சுவாமி விவேகானந்தர் உரைக்கிறார்.
6. தங்கத்தின்ஒளி = ஜீவனிடத்தில் அந்தர்யாமிபரம் பொருளின் ஒருகூறான ஆன்ம ஒளிஜீவனுக்குள் அந்தர்யாமியாகப் பிரகாசிக்கிறது. அந்தர்யாமியை ஆன்றோர்கள் மனசாட்சிஎன்று குறிப்பிடுகிறார்கள். மனிதன் உலகியலில் சிக்கி, செய்வது அறியாதுதவிக்கும்போது அவனுள்ளே இருந்து பரம்பொருளே அவனுக்கு அந்தர்யாமியாக வழிகாட்டுகிறது. கண்ணுடையோர் காண்க, செவியுடையோர் கேட்க என்று அந்தர்யாமியைக் குறிப்பிடுகிறோம். ஒவ்வொருவரிடத்திலும் பிரம்மம் தங்கச்சுரங்கம் போல் மூடப்பட்டுக்கிடக்கிறது. அதை உணராமல் புதையலுக்கு மேலே நின்று கொண்டு பிச்சை எடுக்கும் நிலையில் மனிதன் இருக்கிறான் என்பார் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்.
7. தங்கநகைகள் = தெய்வவடிவங்கள் தங்கம் அகத்துள்ளேயே இருந்தால் அதன் மகிமையை உணரமுடியுமா? மக்கள் தங்கத்தால் அலங்கரித்துக் கொள்ளத்தான் முடியுமா? ஆதலால் பரம்
பொருள் அவதரித்து, இன்னும் கீழிறங்கி வந்து கண்கண்ட தெய்வமாகத்தோன்றுகிறார். தீனவத்சலனாக - அண்டினோரைக் காக்கும் ஆண்டவனாகப் பக்தர்களுக்குப் பலலீலைகள் புரிந்துஅருள்பாலிக்கிறார். பரம்பொருளின் இந்த தெய்வநிலையை - அர்ச்சாவதாரத்தை ஒவ்வொரு பக்தனும்பற்றிக்கொண்டு ஆன்மிக வாழ்க்கையில் - இழந்து விட்டதெய்விகத்தை மீண்டும் அடைவதற்கு முன்னேறுகிறான். மேற்கூறிய உபநிஷத்கருத்துகள், பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகளிலும் (பாகம் 1) காணலாம்:
பிரம்மனும் ஆதிசக்தியான காளியும் ஒன்றே. செயலற்றநிலையில், நான் அதைபிரம்மன் என்கிறேன். உருவாக்கும் போதும், பாதுகாக்கும் போதும், கரைக்கும் போதும் அதை சக்தி என்கிறேன். அசையாத நீர் என்பது பிரம்மனின் உதாரணம். இயக்கத்தில் இருக்கும் போது, அதே நீர் சக்தி அல்லது காளிபோன்றது. காளி, மகாகாலன், பிரம்மனுடன் திகழ்பவள். காளி உருவத்துடன் இருக்கிறாள், மீண்டும் அவள் உருவம் இல்லாமல் இருக்கிறாள். நீ உருவமற்றவள் என்று நம்பினால், காளியை உருவமற்றவள் என்று தியானி. ஒரு லட்சியத்தில் உறுதியாக இரு. அவள் என்ன என்பதை அவளே உனக்குப் புரியவைப்பாள். ஆதாரம்: ரு.சி.வே.ராதாகிருஷ்ண சாஸ்திரிகளின் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம விரிவுரைக்கான முன்னுரையில் அவர் எழுதிய தொகுப்பிலிருந்து விரிவாக்கம் செய்யப்பட்ட கட்டுரை.
– சுவாமி விமூர்த்தானந்தர்,
தலைவர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்.