செல்ல பிராணியான நாய்க்கு கோயில் கட்டி வழிபாடு நடத்தும் குடும்பம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2022 03:04
இளையான்குடி : இளையான்குடி அருகே பிராமணக் குறிச்சியில் தான் வளர்த்த செல்லப் பிராணியான நாய் இறந்தவுடன் அதற்கு கோயில் கட்டி வழிபாடு நடத்தி வரும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கி வருகிறார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மேல்கரை பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் முத்து 80, இவர் கடந்த 11 வருடங்களாக ஒரு நாயை வளர்த்து வந்துள்ளார்.அந்த நாய்க்கு டாம்குமார் என பெயரிட்டு தங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாகவே வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உடல் நலக்குறைவால் அந்த நாய் இறந்ததையடுத்து அந்த நாய் இறந்து கிடந்த இடத்தில் இருந்து பிடி மண் எடுத்து அதனை இளையான்குடி அருகே உள்ள பிராமணக்குறிச்சியில் உள்ள தங்களது தோட்டத்திற்கு கொண்டுபோய் நாய்க்கு பளிங்கினால் ஆன சிலை அமைத்து கோயில் கட்டி தற்போது வரை வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் மாலை அணிவித்து சூடம் காண்பித்து சாமி கும்பிட்டு வருகின்றனர். இளையான்குடி- மானாமதுரை இடையேயான பிரதான சாலையை ஒட்டி இச்சிலை அமைந்திருப்பதை அப்பகுதியில் செல்வோர் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.நாய்க்கு கோயில் கட்டி சாமி கும்பிட்டு வருவதைப் பற்றி அவரது குடும்பத்தினர் கூறுகையில், கடந்த பத்து வருடங்களாக எங்கள் வீட்டில் ஒரு அங்கத்தினராகவே இருந்து வந்த டாம் என்ற நாய் எங்கள் மீது அளவற்ற,அன்பும் பாசமும் வைத்திருந்தது. நாங்களும் அதனை உயிருக்கு உயிராக வளர்த்து வந்தோம். இந்நிலையில் எங்களை விட்டு பிரிந்ததால் அதனை மறக்க முடியாமல் தற்போது அதற்கு கோயில் கட்டி வழிபாடு நடத்தி வருகிறோம் என்றனர்.