தென்காசி: தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே பண்பொழி திருமலைகுமாரசாமி கோயிலுக்கு அடிவாரத்தில் இருந்து மலை மீது பயணிக்க பக்தர்கள் வசதிக்காக ரூ. 40 லட்சம் மதிப்பில் 2 மினி பஸ்கள் வழங்கப்பட்டன.
இங்கு 400 அடி உயர மலை மீது அமைந்துள்ள திருமலை குமாரசுவாமி கோயிலில் முருகப் பெருமான் பாலமுருகனாக அருள்புரிகிறார். அருணகிரிநாதர், தண்டபாணி சுவாமிகளால் பாடல் பெற்ற தலமாகும். நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் கடையநல்லூர் அருணாசலத்தின் முயற்சியால் கோயிலில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நடந்துள்ளது. முன்பு மலைக்கோயிலுக்கு 544 படிக்கட்டுகள் வழியாக செல்ல முடியும்.2011ல் மலை மீதுள்ள கோயிலுக்கு அறநிலையத்துறை பங்களிப்புடன் வாகனங்கள் செல்லும் வகையில் 2.2 கி.மீ., தூரம் மலைப்பாதை அமைக்கப்பட்டது. இக்கோயிலில் தங்கத்தேர், ராஜகோபுரம் போன்றவையும் அருணாசலம் உள்ளிட்ட நன்கொடையாளர்கள் முயற்சியில் உருவாகின. மலைக்கோயிலுக்கு தனியார் வாகனத்தில் அழைத்து செல்ல ஒருவருக்கு ரூ.50 வரை வசூலிக்கப்பட்டது. தற்போது அடிவாரத்தில் இருந்து மலை மீது பக்தர்கள் இலவசமாக செல்ல ரூ 40 லட்சம் மதிப்பில் இரண்டு மினி பஸ்களை அருணாசலம் வழங்கியுள்ளார்.
மினி பஸ்கள் வழங்கும் விழாவில் ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கமிஷனர் ஜெ.குமரகுருபரன், இணை கமிஷனர் அன்புமணி, கலெக்டர் கோபாலசுந்தரராஜ், எம்.எல்.ஏ.,க்கள் சதன் திருமலைக்குமார், பழனி நாடார், நன்கொடையாளர் அருணாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இரண்டு பஸ்களுக்கான டிரைவர் சம்பளம், பராமரிப்பு வைப்புத்தொகையும் நன்கொடையாளர் தரப்பில் வழங்கப்பட்டது. பயணிகள் ஒரு முறை பயணிக்க ரூ 10 கட்டணம் என நிர்ணயிக்க அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.