பதிவு செய்த நாள்
02
ஏப்
2022
08:04
காங்கேயம்: சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், போகர் சித்தர் திருவுருவப்படம் இடம் பெற்றுள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே, சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், ஆண்டவன் உத்தரவுப்பெட்டி உள்ளது. இதில் பக்தர்களின் கனவில் தோன்றி, சுப்பிரமணியசுவாமி குறிப்பிடும் பொருள் வைக்கப்பட்டு பூஜிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த பொருளுக்கு கால நிர்ணயம் ஏதுமில்லை. அடுத்த பொருள் வரும் வரை உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். இந்த உத்தரவு பொருளானது, பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் காலத்தில், சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையாக அல்லது எதிர்மறையாக இருக்கலாம். கடலுார் மாவட்டம், குண்டுசாலை, குறிஞ்சி நகரை சேர்ந்த பொன்.கபில்தேவ், 42, என்ற பக்தரின் கனவில் உத்தரவான, போகர் சித்தர் திருவுருவப்படம் நேற்று முதல் பெட்டியில் இடம் பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த மார்ச், 21ம் தேதி முதல் இலவம் பஞ்சு, பருத்தி பஞ்சு, சோளி ஆகியன வைக்கப்பட்டிருந்தது. ஆண்டவன் உத்தரவு பெட்டியில், 10 நாட்களில் பொருள் மாறியது இதுதான் முதல் முறை என்று, கோவில் சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர்.