பதிவு செய்த நாள்
02
ஏப்
2022
01:04
மதுரை : மதுரை மாநகராட்சியில் மேயர் இந்திராணி, துணைமேயர் நாகராஜன், கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் நடந்த சித்திரை திருவிழா குறித்த ஆலோசனை கூட்டத்தில் விழா தகவல்களை அறிய மாமதுரை என்ற செயலி உருவாக்க முடிவு செய்யப்பட்டது.
மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள சித்திரை, மாசி, ஆவணி மூல வீதிகளில் துாய்மை பணி, பக்தர்கள் பாதுகாப்பிற்காக மருத்துவ குழு, தீயணைப்பு ஆம்புலன்ஸ், தகவல் மையம், குடிநீர், நடமாடும் கழிவறை சி.சி.டி.வி., கேமரா, மின்சாரம், மின் விளக்கு, எல்.இ.டி., திரை, வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. கள்ளழகர் எழுந்தருளும், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள், மருத்துவ சேவை, அவசர உதவி எண்கள், முக்கிய இடங்களுக்கு செல்லும் வழித்தடம், விழா கால அட்டவணை உள்ளிட்ட தகவல்களை மக்கள் அறிய மாமதுரை என்ற செயலி உருவாக்கப்படுகிறது. போலீஸ் துணை கமிஷனர்கள் தங்கதுரை, ராஜசேகரன், ஆறுமுகசாமி, கோயில் இணை கமிஷனர் செல்லத்துரை, துணை கமிஷனர் சங்கீதா, உதவி கமிஷனர் அனிதா, நகர் பொறியாளர் அரசு, நகர்நல அலுவலர் ராஜா, உதவி கமிஷனர்கள் ரமேஷ், அமிர்தலிங்கம், சுரேஷ்குமார், தட்சிணாமூர்த்தி, ஆறுமுகம், பி.ஆர்.ஓ.,க்கள் சாலிதளபதி, மகேஸ்வரன், கல்வி அலுவலர் ஆதி ராமசுப்பு, சுகாதார அலுவலர்கள், போக்குவரத்து அலுவலர்கள் பங்கேற்றனர்.