பதிவு செய்த நாள்
07
ஏப்
2022
08:04
ஆத்துார்: உலகில் உயரமான, 146 அடி உயர முத்துமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம் பக்தர்கள் வெள்ளத்தில் கோலாகலமாக நடந்தது. ஹெலிகாப்டரில் இருந்து பூக்கள் துாவப்பட்டன. சேலம் மாவட்டம், ஆத்துாரைச் சேர்ந்த தொழிலதிபர் முத்து நடராஜன், 78. இவர், புத்திர கவுண்டன்பாளையத்தில், 3 கோடி ரூபாயில், உலகிலேயே உயரமாக 146 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கும் பணியை, 2016ல் துவங்கினார்.
ஆறு ஆண்டு: கடந்த 2018ல், அவர் உடல் நலக்குறைவால் இறந்தபோதும், அவரது மகன்கள் ஸ்ரீதர், வசந்தராஜன், ஞானவேல், மகள் பத்மாவதி ஆகியோர் அப்பணியை தொடர்ந்தனர்.கோவில் நிர்வாக தலைவராக ஸ்ரீதர் பொறுப்பேற்று, பணியை மேற்கொண்டார். ஆறு ஆண்டுகளாக சிலை அமைக்கும் பணி நடந்தது.
பிரமாண்ட யாக சாலை: தொடர்ந்து, மஹா கணபதி, ஆறுபடை முருகன் கோவில்களும் கட்டப்பட்டன. கடந்த 3ல் பிரமாண்ட யாக சாலையில், 33 யாக குண்டம் அமைத்து, 4 கால யாக பூஜை நடந்தது.நேற்று காலை 9:30 மணிக்கு, ஸ்ரீதர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், எம்.ஐ.டி., கல்வி நிறுவன துணைத் தலைவர் பிரவீன்குமார், புனித நீர் கலசங்களை, மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு சென்றனர். காலை 10:30 மணிக்கு, திருவாரூர் சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார் உட்பட ஆறுபடை முருகன் கோவில் குருக்கள், 146 அடி உயர முருகன் சிலை, ஆறுபடை முருகன் கோவில்களின் கலசம் மீது, புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.அப்போது, ஹெலிகாப்டர் மூலம், முருகன் சிலை, மலைக்குன்றில் உள்ள சுப்ரமணியர் கோவில் மீது பூக்கள் துாவப்பட்டன. கந்தனுக்கு அரோகரா...பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. கந்தனுக்கு அரோகரா... முருகனுக்கு அரோகரா... என, கோஷம் எழுப்பி, பக்தர்கள் வழிபட்டனர். சுற்று வட்டார பகுதி கள் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்கள், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்கள், டில்லியில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்து முருகனை வழிபட்டனர். சேலம் எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் தலைமையில், 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.