பதிவு செய்த நாள்
07
ஏப்
2022
05:04
அன்னூர்: அன்னூர் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா துவங்கியது.
அன்னூர், தென்னம்பாளையம் ரோட்டில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பூச்சாட்டு திருவிழா நடத்துவது வழக்கம். கொரோனா காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் திருவிழா துவங்கியது காலையில் விநாயகர் வழிபாடும், கணபதி ஹோமமும் நடந்தது. மாலையில் பூச்சாட்டு துவங்கியது, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
நேற்று மாலையில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். வருகிற 12ம் தேதி மாலை காப்பு கட்டுதல், கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல் நடக்கிறது. தொடர்ந்து 17ம் தேதி வரை தினமும் மாலையில் பூவோடு எடுத்தலும், சிறப்பு வழிபாடும் நடக்கின்றன. 18ம் தேதி இரவு அணிக்கூடை எடுக்கும் நிகழ்ச்சியும், 19ம் தேதி அதிகாலையில் சக்தி கரகம் எடுத்தல், அம்மன் அழைப்பு மற்றும் பொதுமக்கள் பூவோடு எடுத்தல் நடக்கிறது. காலை 9:00 மணிக்கு சுவாமி அழைப்பும், திருக்கல்யாண உற்சவமும், மாலையில் சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது. 20ம் தேதி காலையில் பொங்கல் வைத்தல், மாவிளக்கு ஊர்வலம் நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் கலைநிகழ்ச்சி, ஆன்மீக சொற்பொழிவு, அன்னதானம் வழங்குதல் நடக்கிறது, ஏற்பாடுகளை மாரியம்மன் திருக்கோவில் நற்பணி மன்றத்தினரும், ஊர் பொதுமக்களும் செய்து வருகின்றனர்.