பதிவு செய்த நாள்
09
ஏப்
2022
09:04
திருவண்ணாமலை: ‘சித்ரா பவுர்ணமியில் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க, அனுமதி பெற வேண்டும்’ என, கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சித்ரா பவுர்ணமியான வரும், 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாளில், திருவண்ணாமலைக்கு, 15 லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு தனி நபர்கள், தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் சார்பில் அன்னதானம் அளிக்க கிரிவலப்பாதையில், 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அன்னதானம் செய்ய விரும்புவோர் வரும், 14ம் தேதி வரை, https:/foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து அனுமதி பெறலாம். நேரில் அனுமதி பெற விரும்புவோர், செங்கம் சாலையிலுள்ள உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். அனுமதி பெற வரும்போது, ஆதார் அட்டை, மூன்று பாஸ்போர்ட் போட்டோ கொண்டு வர வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 04175–237416, 98656 89838, 90477 49266, என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அன்னதானம் வழங்க தென்னை, பாக்குமட்டை பொருட்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். குப்பையை சொந்த பொறுப்பில் அகற்ற வேண்டும். அனுமதியின்றி அன்னதானம் வழங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.