அயோத்தியில் இருந்து காட்டுக்கு புறப்பட்ட ராமர், சீதை, லட்சுமணர் மூவரும் கங்கை கரையை அடைந்தனர். அங்கிருந்த ஓடக்காரன் ‘கேவட்’ முகமலர்ச்சியுடன் வரவேற்றான். கேள்விப்படாத பெயராக இருக்கிறதே என யோசிக்க வேண்டாம். இந்த கேவட் தான் ‘குகன்’ என்னும் வேடன். இந்தியில் துளசிதாசர் எழுதிய ராமாயணத்தில் இவனுக்கு ‘கேவட்’ என பெயர் சூட்டியுள்ளார். அவனுக்கு தர வேண்டிய கூலிக்காக, சீதை தன் மோதிரத்தைக் கொடுத்தாள். இதைக் கண்ட கேவட், “சுவாமி! நாம் இருவரும் ஒரு தொழில் செய்பவர்கள். ஆற்றைக் கடக்க வைக்கும் ஓடக்காரன் நான். பிறவிக் கடலைக் கடக்க உதவும் ஓடக்காரர் நீங்கள். ஒரே தொழில் செய்யும் ஒருவருக்கொருவர் கூலி வாங்குவது தர்மம் ஆகாது” என மறுத்தான். அவனது அன்பைக் கண்ட ராமர், “உன்னையும் சேர்த்து தசரதருக்கு ஐந்து பிள்ளைகள் ஆகி விட்டோம்” என வாழ்த்தினார்.