பதிவு செய்த நாள்
11
ஏப்
2022
11:04
பல்லடம்: காமநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், ஸ்ரீராமநவமி உற்சவம் கொண்டாடப்பட்டது. பங்குனி மாதத்தில் நவமி திதியும், புனர்பூச நட்சத்திரமும் இணையும் நாள், ராமர் பிறந்த தினமாக கருதி, ஸ்ரீராம நவமி கொண்டாடப்பட்டு வருகிறது. பல்லடம் அடுத்த, காமநாயக்கன்பாளையம் ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று ராமநவமி உற்சவம் கொண்டாடப்பட்டது. முன்னதாக, ராமர் திருவுருவ படத்துக்கு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. தொடர்ந்து, ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், மற்றும் மூலவர் கரிவரதராஜ பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ராம மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டு, ராமபிரானின் அவதாரம் குறித்து பக்தர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் பரம்பரை அறங்காவலர் வெங்கடாசல ராமானுஜ தாசன் ராமநவமி உற்சவ ஏற்பாடுகளை செய்தார்.