சதுரகிரி பிரதோஷ வழிபாடு: அனுமதிக்காததால் பக்தர்கள் வேதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2022 06:04
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பிரதோஷ வழிபாட்டுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படாததால் பக்தர்கள் வேதனையுடன் திரும்பினர்.
இக்கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு நான்கு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கம். ஆனால், கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக, பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள் என நேற்று முன்தினம் வனத்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று பல்வேறு வெளியூரிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தாணிப்பாறை மலை அடிவாரம் வந்தனர். மழை பெய்யாத நிலையில் தங்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வனத்துறையினரிடம் கோரினர். ஆனால், வனத்துறையினர் அனுமதிக்க மறுத்ததால் வேதனை அடைந்த வெளியூர் பக்தர்கள் வனத்துறை கேட் முன்பு சூடம் ஏற்றி, கோயிலை நோக்கி வணங்கி சென்றனர். கோயிலில் நேற்று மாலை 4:30 மணிக்கு மேல் பிரதோஷ வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.