மயிலாடுதுறை: குத்தாலம் அருகே வழுவூர் பாலமுருகன் கோயிலில் தேவசேனா சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வழுவூர் ஊராட்சி வளையாம் பட்டினத்தில் பாலமுருகன் ஆலயம் அமைந்துள்ளது.இங்கு 38ம் ஆண்டு சித்திரா பௌர்ணமி திருவிழாவையொட்டி கடந்த 6ஆம் தேதி கணபதி ஹோமம் பூர்ணாகுதி வாஸ்து சாந்தி உள்ளிட்டவை நடைபெற்று 7ம் தேதி கொடியேற்றம் நடந்தது.எட்டாம் தேதி யாகசாலை பூஜை பூர்ணாகுதி தீபாராதனை சாமி புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்றது. தொடர்ந்து 10 நாட்கள் யாகசாலை பூஜை பூர்ணாகுதி தீபாராதனைகள் உள்ளிட்டவை நடைபெற்ற நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேவசேனா சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் நேற்று தருமபுர ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடந்தது.இதனை முன்னிட்டு சுவாமியும் அம்பாளும் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினர்.அங்கு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்று பக்தர்கள் சீர்வரிசை எடுத்துவர வேதியர்கள் மந்திரங்கள் முழங்க மாங்கல்ய தாரணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி செந்தில்நாதன் மற்றும் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.