திருமலையில் வசந்தோற்சவம் : இரண்டாம் நாளில் தங்க தேர் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2022 01:04
திருப்பதி: திருமலையில் நடந்து வரும் வருடாந்திர வசந்தோற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று காலையில் தங்க தேர் ஊர்வலம் நடந்தது.
திருமலையில், ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில், தேவஸ்தான நிர்வாகம் வசந்தோற்சவத்தை நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் துவங்கிய வசந்தோற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று காலையில் தங்கதேர் ஊர்வலம் நடைபெற்றது. இதில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பஸ்வாமி வலம் வந்தனர். மகாலட்சுமி அம்சம் பொருந்திய தங்க தேரை, பெண்கள் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.
பின், ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பஸ்வாமி, கோவில் அருகில் உள்ள வசந்த மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இதில் திருமலை ஜீயர்கள், தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இதற்கிடையே, திருமலையில் உண்டியல் வருவாய், தினசரி 2 முதல் 3 கோடி ரூபாய் வரை வசூலாவது வழக்கம். தற்போது பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால்,நேற்று முன்தினம் மட்டும் 5.11 கோடி ரூபாய் உண்டியல் வருவாயாக கிடைத்தது. இது இம்மாதத்தில் கிடைத்த அதிகபட்ச வருமானம்.