சித்ரா பவுர்ணமி: மாரியூரில் சிவபெருமான் கடலுக்குச் சென்று வலைவீசும் படலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2022 07:04
சாயல்குடி:
சாயல்குடி அருகே பழமை வாய்ந்த மாரியூர் பூவேந்திய நாதர் சமேத பவளநிறவல்லி
அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்., 7 அன்று கொடியேற்றத்துடன்
துவங்கியது. தொடர்ந்து பத்து நாட்களும் காலை 9:00 மாலை 6:00 மணிக்கு
சிறப்பு அபிஷேகம், ஆராதனை சுவாமி புறப்பாடு நடந்தது.
திருவிளையாடற்
புராணத்தில் 57வது படலமாக விளங்கக்கூடிய வலைவீசும் படலம் ஒவ்வொரு ஆண்டும்
மாரியூர் கடற்கரையில் நிகழ்த்தி காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு புராண
வரலாறு சொல்லப்படுவது வழக்கமாகும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சித்ரா
பவுர்ணமியை முன்னிட்டு நேற்று காலை 7 மணியளவில் பூவேந்தியநாதர் கோயிலில்
இருந்து ரிஷப வாகனத்தில் உற்ஸவ மூர்த்திகள், மாரியூர் கடற்கரைக்கு
மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். நேற்று காலை 7:45
அளவில் நாட்டுப்படகில் சிவபெருமான் வேடமணிந்த குருக்கள் மற்றும் மீனவர்
வேடம் அணிந்தவர் ஆகியோர் கடலுக்குள் சென்றனர். வீசப்பட்ட வலையில் சுறா மீன்
(பொம்மை) சிக்கியது. ஒரு முனையில் கட்டப்பட்ட கயிற்றில் மூலமாக கரைக்கு
இழுத்து வரப்பட்டு சுறா மீனுக்கு சாபவிமோசனம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பின்னர் கோயிலில் மாப்பிள்ளை, பெண் அழைப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள்
நடைபெற்று, அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் உற்ஸவ மூர்த்திகளுக்கு காலை 10:30
மணியளவில் திருக்கல்யாண வைபவம் நடந்தது. பக்தர்கள் மீது அட்சதை
தூவப்பட்டது.
காலை முதல் இரவு வரை அன்னதானம் குளிர்பானங்கள்
வழங்கப்பட்டது. உற்ஸவ மூர்த்திகள் புறப்பாட்டிற்கு பின்பு கொடியிறக்கம்
நடந்தது. இரவில் சுவாமி, அம்பாளுக்கு பள்ளியறை பூஜை நடந்தது. ஏற்பாடுகளை
ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர், மகாசபை பிரதோஷ அன்னதானக்
கமிட்டியினர் செய்திருந்தனர். புராண நிகழ்வை காண்பதற்காக சுற்றுவட்டார
கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கடற்கரையில் திரளாக குவிந்தனர்.