பெரியகுளம் வராக நதியில் குதிரை வாகனத்தில் இறங்கிய கள்ளழகர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஏப் 2022 02:04
பெரியகுளம்: பெரியகுளம் வரதராஜப் பெருமாள் ராஜ அலங்காரத்தில் கள்ளழகராக குதிரை வாகனத்தில் வராகநதி ஆற்றில் இறங்கினார்.
சித்ரா பவுர்ணமி முன்னிட்டு பெரியகுளம் வரதராஜப் பெருமாள், கள்ளழகராக உழவர் சந்தை அருகே வராக நதி ஆற்றில் கோவிந்தா கோவிந்தா கோஷம் முழங்க காலை 6:00 மணிக்கு இறங்கினார். இரு ஆண்டுகளாக நடக்காததால், கள்ளழகரை வரவேற்க ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
பச்சைப்பட்டு, கருப்பு பொட்டு: கள்ளழகர் இந்தாண்டு பச்சைப்பட்டு அணிந்து, கருப்பு திலகம்(பொட்டு) வைத்திருந்தார். அர்ச்சகர்கள் கூறுகையில்: இவ்வாறு அமைவது பெரியகுளம் பகுதியில் விவசாயம் செழிக்கவும், பொதுமக்கள் சகல ஐஸ்வர்யமாக வாழ்வார்கள் என்பதைக் குறிக்கும் ஐதீகம் என்றனர். மண்டகப்படி:அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவரது தந்தை ஓட்டக்காரத்தேவர் பெயரில் நடத்திய மண்டகப்படியில், கள்ளழகர் காளியம்மன் கோயிலுக்கு எழுந்தருளினார். இதில் ஓ. பன்னீர்செல்வம், கவுன்சிலர் ஓ.சண்முகசுந்தரம் மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்றனர். வடகரை, தென்கரை வராக நதிக்கரையோரம் 35 மண்டகப்படிக்கு கள்ளழகர் சென்றுவந்தார். பக்தர்கள் சிலர் தண்ணீரை பீச்சியடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.