அன்னூர்: நாகமாபுதூர் மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
நாகமா புதூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா கடந்த 5ம் தேதி அம்மன் வழிபாடுடன் துவங்கியது. 12ம் தேதி கம்பம் நடப்பட்டது. 18ம் தேதி வரை தினமும் இரவு சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று மாலையில் கரகம் எடுத்தல், அணிக்கூடை எடுத்தல், அம்மன் அழைத்தல் நள்ளிரவு வரை நடந்தது. ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக அம்மன் அழைத்துவரப்பட்டு கோவிலுக்கு வந்தது. இன்று அதிகாலை 5:30 மணிக்கு திருக்கல்யாணமும், இதையடுத்து கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தலும் நடந்தது. பொதுமக்கள் மாவிளக்கு ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் அம்மனுக்கு சமர்ப்பித்தனர். மதியம் முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.