கீழப்பாளையம் திரௌபதி அம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஏப் 2022 02:04
உளுந்தூர்பேட்டை: பு.கொணலவாடி ஸ்ரீ பச்சைவாழி அம்மன் கோவில், சேந்தநாடு மற்றும் கீழப்பாளையம் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா நடந்தது.
உளுந்தூர்பேட்டை தாலுகா பு.கொணலவாடி ஸ்ரீ பச்சைவாழி அம்மன் கோவில், சேந்தநாடு திரௌபதி அம்மன் கோவில், எலவனாசூர்கோட்டை அடுத்த கீழப்பாளையம் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா நடந்தது. அதனையொட்டி கடந்த 15ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. 21ம் தேதி அதிகாலை 5 மணியளவில் கழுமரம் ஏறுதல் நிகழ்ச்சியும், காலை 6 மணியளவில் அர்ஜூனர் வில் வளைத்தல் நிகழ்ச்சியும், மதியம் 2 மணியளவில் அரவான் களபலி கொடுத்தல் நிகழ்ச்சியும், கோட்டை இடித்தல் நிகழ்ச்சியும், மகாபாரத சொற்பொழிவும், மாலை அக்னி வசந்த உற்சவம், கூந்தல் முடித்தல் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று முன்தினம் மாலை தீமிதி திருவிழா நடந்தது. இதற்காக குளக்கரையில் இருந்து அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கோவிலில் இருந்து சக்தி அழைத்து புறப்பட்டு மாலை 6 மணியளவில் கோவில் வளாகத்தில் முன்பு அமைக்கப்பட்ட தீ குண்டதில் அம்மன் மற்றும் அர்ஜுனன் உள்ளிட்ட சுவாமிகள் தீ குண்டத்தில் இறங்கினர். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை நிவர்த்தி செய்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.