பதிவு செய்த நாள்
27
ஏப்
2022
11:04
பல்லடம்: பல்லடம் அடுத்த, சித்தம்பலம் நவகிரக கோட்டையில், 12ம் ஆண்டு விழா நேற்று நடந்தது.
கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் திருவிளக்கு பூஜையை துவக்கி வைத்து பேசியதாவது: உடல் முழுவதும் ரத்தம் எவ்வாறு பரவி இருக்கிறதோ, அதுபோன்று, உலகம் முழுவதும் பரவி இருப்பவள் ஆதிபராசக்தி. அரிசிகள் ஒன்று சேர்ந்து சாதம் ஆவது போல், அனுக்கள் ஒன்று சேர்ந்த ஆதியாக உள்ளாள் பராசக்தி. கோவிலுக்கு நீங்கள் சென்றால்தான் கடவுளின் அனுக்கிரகம் கிடைக்கும். ஆனால், இன்று பல பெண்கள் கோவிலுக்கே செல்வது கிடையாது. இந்துக்களை தவிர்த்து, மற்ற மதத்தினர் கோவிலுக்கு செல்வதை தவறாமல் கடைபிடிக்கின்றனர். தமிழகத்தில் கோவில்களுக்கு பஞ்சமே இல்லை. கோவிலுக்கு செல்பவர்களின் எண்ணிக்கைதான் குறைவாக உள்ளது. வெள்ளிக்கிழமை தோறும் விளக்கு ஏற்றி வைத்து, இதுபோன்று திருவிளக்கு வழிபாடு செய்யுங்கள். அஷ்ட லட்சுமியும் உங்கள் இல்லம் தேடி வருவர். கோவிலுக்கு வருவது பேசுவதற்கு அல்ல. மந்திரங்களை உச்சரித்து, அதன் மூலம் இறைவன் அருள் பெறுவதால், புண்ணியம் கிடைக்கும் என்றார். ஆண்டு விழாவை முன்னிட்டு, 108 திருவிளக்கு பூஜை, 108 சங்காபிஷேகம், மற்றும் மழை வேண்டி வருண மஹா மந்திர வேள்வி, நவக்கிரக வேள்வி உள்ளிட்டவை நடந்தன. 108 திருவிளக்கு பூஜையில், பெண்கள், சிறுமியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறப்பு அலங்காரத்தில், அம்மையப்பராக சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.