பதிவு செய்த நாள்
28
ஏப்
2022
12:04
காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம் திரவுபதியம்மன் கோவில் வசந்த திருவிழாவை முன்னிட்டு, நேற்று அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடந்தது.
சின்ன காஞ்சிபுரம், கோகுலம் தெருவில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவில் வசந்த திருவிழா, இம்மாதம் 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் மாலையில் மகாபாரத சொற்பொழிவு நடக்கிறது. வில் வளைப்பு, சுபத்திரை திருமணம், ராஜசூய யாகம், திரவுபதி துகில், அர்ச்சுனன் தபசு, குறவஞ்சி, கிருஷ்ணன் துாது, அரவான் களப்பலி, கர்ணன் மோட்சம், பதினெட்டாம் போர், துரியோதனன் படுகளம் போன்ற கட்டை கூத்து நாடகம் நடக்கிறது. அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சியில், பனை மரத்தில் ஏறி, அர்ச்சுனன் தவம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.திருமணம் ஆகாத பெண்கள், விரைவில் திருமணம் ஆவதற்கும், திருமணம் ஆன பெண்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்க வேண்டும் என வேண்டியும், மரத்தில் இருந்து அர்ச்சுனன் வீசிய எலுமிச்சை பழத்தை சேலை முந்தானையால் பிடித்தனர். வசந்த விழா வரும், 4ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அன்று காலையில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி, மாலையில் தீ மிதி விழா நடக்கிறது.