மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் 10 நாள்கள் நடைபெறவுள்ள சமய பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயனடையுமாறு தருமபுரம் அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் மு.சிவச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியது: திருக்கயிலாயப் பரம்பரை தருமபுரம் ஆதீனத்தை நிறுவிய ஆதி பரமாசாரியார் ஸ்ரீகுருஞானசம்பந்தர் குருபூசைப் பெருவிழாவை முன்னிட்டு, அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் 12.5.2022 முதல் 21.5.2022 வரை 10 நாள்கள் ஆதீனத் திருமடத்தில் உள்ள சிவஞான நிலையத்தில் உண்மை விளக்கம், திருவருட்பயன், அகத்தியர் தேவாரத்திரட்டு, சிவபோகசாரம் ஆகிய பாடத்திட்டத்தில் சமயப் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சியின் நிறைவில் தேர்வு நடத்தி தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சான்றிதழ் வழங்குவார். பயிற்சி வகுப்பில் பங்கேற்பவர்களுக்கு 10 நாள்களும் மூன்று வேளை உணவும், காலை, மாலை இருவேளை தேநீர் உள்ளிட்ட சிற்றுண்டியும் வழங்கப்பெறும். பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் அன்பர்கள் தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி முதல்வர் சி.சுவாமிநாதன் (செல்: 9865350555), தமிழ் உயராய்வுத் துறை உதவிப் பேராசிரியர் துரை.கார்த்திகேயன் (செல்: 7904108289) ஆகியோரை தொடர்புகொண்டு, விண்ணப்ப படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்து, ஒருங்கிணைப்பாளர், சமயப்பயிற்சி வகுப்பு, தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி, தருமபுரம், மயிலாடுதுறை 609001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அன்பர்கள் அனைவரும் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம் என அச்செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.