பதிவு செய்த நாள்
29
ஏப்
2022
05:04
மதுரை-திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் தரிசனம் மற்றும் திரிசுதந்திரர்களை முறைப்படுத்த, அறநிலையத்துறை பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக தாக்கலான வழக்கை, கூடுதல் நீதிபதிகள் அமர்விற்கு அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரைத்துள்ளது.
திருச்செந்துார் ஜெயந்திநாதர் திரிசுதந்திரர்கள் காரியஸ்தர், ஸ்தானிகர் சபா செயலர் நாராயணன் தாக்கல் செய்த பொதுநல மனு:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகத்தை சீரமைக்க, தமிழக அறநிலையத் துறை கமிஷனர், ஏப்., 1ல் உத்தரவு பிறப்பித்தார்.அதில், இலவச தரிசனம் மற்றும் 100 ரூபாய் கட்டண தரிசனம் மட்டும் செயல்படுத்தப்படும். 20 மற்றும் 250 ரூபாய் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுகிறது என அறிவித்தார்.மேலும், இதர சன்னதிகளில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யத் தேவையான மாற்றங்கள் செய்ய வேண்டும். தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற அறிவிப்பு இடம் பெற வேண்டும்.திரிசுதந்திரர்கள் பெயரை கோவில் நிர்வாகத்தில் பதிவு செய்ய வேண்டும். அவர்கள் மீது குற்ற வழக்கு நிலுவையில் இல்லை என்பதற்கு காவல் துறை சான்று அவசியம்.கோவிலுக்குச் சொந்தமான சொத்தில் குடியிருக்கவில்லை என்பதற்கான சான்று போன்றவற்றை திரிசுதந்திரர்கள் சமர்ப்பிக்க வேண்டும்
.கோவிலில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ள மாட்டேன் என உறுதிமொழி அளிக்க வேண்டும். பக்தர்கள், திரிசுதந்திரர்களிடம் கருத்து கேட்காமல், கமிஷனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது, திரிசுதந்திரர்களின் உரிமையை பாதிக்கிறது. கமிஷனரின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு நாராயணன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.இந்த மனு, நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், ஆர்.விஜயகுமார் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அமர்வு பிறப்பித்த உத்தரவு:கோவில் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்த ஏப்., 1ல் உத்தரவு பிறப்பித்ததாக அறநிலையத்துறை கூறுகிறது. ஆனால், மத நம்பிக்கைகள், நடைமுறைகள் மற்றும் சடங்குகளில் அரசு தலையிடுகிறது என மனுதாரர் தரப்பு கூறுகிறது.இவ்வழக்கில் சட்டப்பூர்வமாக பல்வேறு கேள்விகள் எழுகின்றன. எனவே, இதை பரிசீலிக்க கூடுதல் நீதிபதிகள் அமர்வு அமைக்க, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கிறோம்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.