பழநியில் அறங்காவலர் குழு விரைவில் நியமனம்: உயர் நீதிமன்ற மதுரை கிளை எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2022 05:04
மதுரை-பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு அறங்காவலர் குழுவை நியமிக்கும் நடவடிக்கைகள் ஜூன் 30க்குள் நிறைவடையும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை எதிர்பார்ப்பை வெளியிட்டு உள்ளது.
சென்னை மயிலாப்பூர் ரமேஷ் ஏற்கனவே தாக்கல் செய்த மனு:பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில் வளாகம் மற்றும் அதன் உபகோவில்கள், சார்பு நிறுவனங்களை பராமரிக்க ஒப்பந்த பணியாளர்களை ஈடுபடுத்துவதற்கான டெண்டர் அறிவிப்பை, கோவில் செயல் அலுவலர் மற்றும் தக்கார் வெளியிட்டனர்.அதில் விதிகளை பின்பற்றவில்லை; பக்தர்களின் உரிமையை பாதிக்கும். அறங்காவலர் குழு தான் நிதி சார்ந்த முடிவுகளை மேற்கொள்ள முடியும்.செயல் அலுவலரே தக்காராக தொடர்வதால், அவர் இதுபோன்ற முடிவுகளை மேற்கொள்ள அதிகாரம் இல்லை. டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு ரமேஷ் மனு செய்தார்.
இந்த வழக்கில், 2020 செப்., 22ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் குறிப்பிட்ட ஆண்டுகள் தான் பதவியில் இருப்பர். ஆனால், இக்கோவிலில் ஒன்பது ஆண்டுகளுக்கு மேல் செயல் அலுவலரே தக்காராக இரட்டைப் பதவியை நிர்வகிக்கிறார்.தக்கார் பதவி தற்காலிக ஏற்பாடு தான். கொள்கை முடிவு மற்றும் நிதி சார்ந்த முடிவுகளை அறங்காவலர் குழு தான் மேற்கொள்ள முடியும்.தக்கார் டெண்டர் அறிவிப்பு வெளியிட முடியாது. அதை ரத்து செய்கிறேன். பழநி கோவிலுக்கு அறங்காவலர் குழுவை அமைப்பதை உறுதி செய்ய மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
நீதிபதியின் உத்தரவு பின்பற்றப்படாததை அடுத்து ரமேஷ், தனி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்றாததால் அறநிலையத் துறை கமிஷனர் குமரகுருபரன், செயலர் சந்திரமோகன், பழநி கோவில் இணை கமிஷனர் பாலசுப்பிரமணியம் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனு செய்தார்.
அந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.நீதிபதி பிறப்பித்த உத்தரவு: வழக்கு ஜூன் 30க்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதற்குள் அறங்காவலர் குழுவை நியமிக்கும் நடவடிக்கைகள் நிறைவடையும்; செயல் அலுவலரே தக்காராக செயல்படும் விரும்பத்தகாத நடைமுறை நிறுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கிடையில் எந்த முக்கிய கொள்கை முடிவும் எடுக்கப்படாது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.