பதிவு செய்த நாள்
29
ஏப்
2022
05:04
தொண்டாமுத்தூர்: கோவை, பூண்டி வெள்ளியங்கிரி மலையில், மே 1 முதல், பக்தர்கள் மலை ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக் கோவிலை ஒட்டி உள்ள மலை தொடரில், ஏழாவது மலை உச்சியில், சுயம்பு வடிவில் உள்ள ஈசனை தரிசிக்க, ஆண்டுதோறும், பிப்., முதல் மே மாதம் வரை, பக்தர்கள் மலை ஏற, வனத்துறையினர் அனுமதி வழங்குகின்றனர். இந்தாண்டு, கடந்த, பிப்.,28ம் தேதி முதல் பக்தர்கள் மலையேற வனத்துறையினர் அனுமதியளித்தனர். இதனையடுத்து, பக்தர்கள் மலையேறி வந்தனர். தமிழ் புத்தாண்டு, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி ஈசனை தரிசித்தனர். இந்நிலையில், மே, 1ம் தேதி முதல் பக்தர்கள் மலையேற, வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட, ஆண்டுதோறும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடக்கும் சிவராத்திரி மற்றும் சித்ரா பவுர்ணமி திருவிழா காலங்களில், பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது, சித்ரா பவுர்ணமி மற்றும் சிவராத்திரி போன்ற திருவிழா காலங்கள் முடிவுற்றதாலும், கோடை வெயில் அதிகமாக இருப்பதாலும், தண்ணீருக்காகவும், உணவுக்காகவும், வனவிலங்குகள் நடமாட்டம் மலைப்பாதையில் அதிகமாக உள்ளது. எனவே, மே மாதம் முதல் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். பொதுமக்களும் பக்தர்களும் வனத்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து மலைக்கு செல்ல வேண்டாம் என, கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.