பதிவு செய்த நாள்
01
மே
2022
01:05
சிவகங்கை: சிவகங்கை அருகே திருமலை மடைகருப்பணசுவாமி கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு 223 ஆடுகள் வெட்டி ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விழா நடந்தது. சிவகங்கை ஒன்றியம், திருமலைகோனேரிபட்டி ஊராட்சியில் மடைகருப்பணசுவாமி கோயில் உள்ளது.
இங்கு ஆண்டு தோறும் சித்திரை திருவிழாகொண்டாடப்படும். முற்றிலும் ஆண்கள் மட்டுமே
விரதம் இருந்து ஆடுகள் பலியிட்டு நேர்த்தி செலுத்துவர். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டாக விழா நடக்கவில்லை. இந்த ஆண்டு ஏப்.,14 அன்று காப்பு கட்டுடன் மடை கருப்பணசுவாமி கோயில் சித்திரை திருவிழா தொடங்கியது. இக்கிராமத்தை சேர்ந்த ஆண்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். ஏப்.,29 அன்று காலை 10:00 மணிக்கு சுவாமிக்கு
பொங்கல் வைத்து வழிபட்டனர். 223 ஆடுகள் பலியிட்டு நேர்த்தி பக்தர்கள் 223 கருப்பு நிற வெள்ளாடுகளை பலியிட்டனர். ஆட்டின் தோலை அங்கேயே எரித்துவிட்டனர். ஆட்டு கறியை
சமைத்து, பச்சரிசி சாதம் மட்டுமே வடித்து மடைகருப்பருக்கு நெய்வேத்தியம் செய்தனர். நேற்று அதிகாலை 12:30 மணிக்கு சுவாமி அசரிரீ கொடுத்ததும் விழாவிற்கு வந்திருந்த 10 ஆயிரம் ஆண்களுக்கு அசைவ விருந்து பரிமாறப்பட்டது. சிவகங்கை மட்டுமின்றி மதுரை , புதுக்கோட்டையை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். சிவகங்கை எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.