பதிவு செய்த நாள்
02
மே
2022
03:05
திருப்பூர்:”ஏழைகளுக்கு
உதவி செய்வதால், மடாதிபதிகளும், ஆதீனங்களும் அனுபவிக்க முடியாத, சிவ
பாக்கியத்தை, சாதாரண சிவபக்தர் அனுபவிக்க முடியும்,” என, சிவாக்கர தேசிய
சுவாமி பேசினார்.
திருப்பூர் திருமுறை சைவநெறி அறக்கட்டளை சார்பில்,
சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய ஏழாம் திருமுறை முற்றோதல் பெருவிழா,
திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., அறக்கட்டளை வளாகத்தில் நடந்து
வருகிறது.மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் முற்றோதல் விழாவில்,
கோபி வெள்ளாளபாளையம் திருஞானசம்பந்தர் மடம், சிவாக்கர தேசிக சுவாமி, தேவார
திருமுறைகள் பாராயணம் செய்து, அருளாசி வழங்குகிறார்.நேற்று நடந்த
நிகழ்ச்சியில், சிவாக்கர தேசிக சுவாமி பேசியதாவது:இறைவன் மனிதர்களைப் போலவே
பிற உயிர்களையும் படைத்துள்ளார். ஜீவராசிகளை கொல்லக்கூடாது; குருவி
உள்ளிட்ட பறவை இனங்களுக்கும், விலங்குகளுக்கும் உணவு வழங்கி அவற்றை
பாதுகாப்பதே தர்மம்.சாதாரண பறவைகளுக்கு, தானியங்களை உணவாக கொடுப்பதன்
மூலம், பெரும் பாவங்களில் இருந்தும் விடுபட முடியும்.மிகப்பெரிய
பொருட்செலவில் தானதர்மங்கள் செய்வது மட்டுமே தர்மம் அல்ல; ஏழை எளிய
மக்களுக்கு தர்மம் செய்பவர்களை பாராட்டுவதும், தர்மம்தான்.தற்போது செய்யும்
புண்ணியமும், பாவமும் மறுஜென்மத்தில் ஐந்து மடங்கு அதிகமாகி, அதற்கான
பலாபலன்களை அனுபவிக்க வேண்டியிருக்கும். சர்வதேச அளவில் பார்க்கும்பொழுது,
மனிதப் பிறவியில் செய்த பாவங்களுக்கு, இந்தப் பிறவியிலேயே பரிகாரம் தேடும்
வழிபாட்டு முறை, பாரதத்திருநாட்டில் மட்டுமே இருக்கிறது.
தானதர்மங்கள்
செய்வதன் மூலமாகவும் ஏழைகளுக்கு உதவி செய்வதன் மூலமாகவும், மடாதிபதிகளும்,
ஆதீனங்களும் அனுபவிக்க முடியாத, சிவ பாக்கியத்தை, சாதாரண சிவபக்தர்
அனுபவிக்க முடியும். பன்னிரு திருமுறைகளையும், பக்தியுடன் பாராயணம்
செய்வதன் மூலமாக பெரும் துன்பங்களிலிருந்து தப்பிக்க முடியும். அன்றாடம்
மனிதர்கள் உணவுகளை அதிகம் வீணடிக்கின்றனர்.அன்னபூரணியை அலட்சியம்
செய்யக்கூடாது; அன்னத்தை வீணாக்கினால், மறுஜென்மத்தில் உணவுக்கு சிரமப்பட
வேண்டிய நிலை ஏற்படும்.புதிய நாகரீகம் என்ற பெயரில், உலகத்தின் சுமையை
கூட்டிக் கொண்டு இருக்கிறோம்; ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், பாலிதீன்
பொருட்களை யாரும் பயன்படுத்தக் கூடாது.இவ்வாறு, அவர் பேசினார்.