பதிவு செய்த நாள்
04
மே
2022
08:05
தி.மு.க., அரசு தவறான பாதையில் பயணிக்கிறது என பலரும் கூறினர். இப்போது, ஆதினகர்த்தர்களுக்கு எதிராக, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதை பார்க்கும்போது, இனி அமைதியாக இருக்க வழியில்லை, என, உலக தமிழ் சைவ பெருமக்கள் சங்க நிறுவனரும், பொதுச்செயலருமான மீனாட்சிசுந்தரம் கூறினார்.
அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில், தருமபுரம், திருவாவடுதுறை, வேளாக்குறிச்சி, திருப்பனந்தாள் என, ஏகப்பட்ட மடங்களும், ஆதினகர்த்தர்களும் உள்ளனர். கோவில்கள் உள்பட ஒவ்வொரு ஆதின மடத்துக்கும், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. இந்த மடங்களில், பாரம்பரிய முறைப்படி ஆதினகர்த்தர்கள் நியமிக்கப்பட்டு, ஆன்மிகத்தோடு, நிர்வாகமும் நடக்கிறது. இந்த நிர்வாகத்துக்குள் ஒருபோதும் அரசியல் இல்லை. ஆனால் சமீப நாட்களாக ஆதினகர்த்தர்களை முடக்கும் வகையில், அரசு தரப்பில் இருந்து முயற்சித்து வருகின்றனர். கவர்னர் என்ற வகையில் ரவியை ஆதினகர்த்தர்கள் தங்கள் மடங்களுக்கு அழைத்தனர். கவர்னரை ஆளும் தரப்பினருக்கு பிடிக்கவில்லை என்பதால் ஆதினகர்த்தர்களை எதிர்க்க வேண்டும் என்பதற்காக, பட்டின பிரவேச பல்லக்கு பவனி உற்சவத்தை கையில் எடுத்துள்ளனர்.
பட்டின பிரவேசம் என்பது பாரம்பரியத்துடன் நடந்து வரும் நிகழ்வு. குல குருவை அந்த குலத்தை சார்ந்தவர்கள் எவ்வாறு நடத்த வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சி. தன் குலத்தில் தோன்றிய குருவை, தன் தோள்களில் துாக்கி, இறைவனுக்கு சமமாக நடத்தும் ஒழுக்கத்தை, இந்த உலகிற்கு தந்தவர்கள் வேளாளர்கள். தொன்று தொட்டு நிகழ்ந்து வரும் இந்த நிகழ்வை, இந்தாண்டும் நடத்த, தருமபுரம் ஆதினம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள், நாள் குறித்து வைத்திருந்தார். ஆனால், கோட்டாட்சியர் தடை உத்தரவு போட்டுள்ளார். பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த மக்கள் ஒன்று கூடி நடத்தும், ஒரு ஆன்மிக நிகழ்ச்சிக்கு யாரோ ஒரு சிலர் சேர்ந்து, தடை போட முடியும் என்றால், எந்த நிகழ்ச்சியையும் இனி யாரும் நடத்த முடியாது. இதற்கு அரசு துணை போவது வேடிக்கையாக உள்ளது. அதே ஒரு சிலர் கூடி, சென்னை பெரியார் திடலில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு தடை போட முயன்றால், சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி, நிகழ்ச்சிக்கு அரசு தரப்பு தடை விதிக்குமா? ஒரு சிலரை திருப்திபடுத்தும் நோக்கத்துக்காக, அரசு இந்த விஷயத்தில் ஆழமாக காலை பதிக்குமானால், விளைவுகளை சந்திக்க தான் வேண்டும். இவ்வாறு மீனாட்சிசுந்தரம் கூறினார். இதேபோல், தமிழக சைவ வேளாளர் பேரவை என்ற அமைப்பும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழக சோழிய வெள்ளாளர் நல சங்கத்தின் கே.வி.சுகுமாறன், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பட்டின பிரவேச நிகழ்ச்சியால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என, மாவட்ட கலெக்டர் கருதினால், ஊழியர்களுக்கு பதிலாக, சோழிய வெள்ளாளர் நல சங்க பொறுப்பாளர்களும், அனைத்து வேளாளர் கூட்டமைப்பு நிர்வாகிகளும், பல்லக்கை சுமக்க தயாராக இருக்கிறோம். சட்டம் ஒழுங்கு பிரச்னை வந்தால், சந்திக்க தயாராக இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
500 பேருடன் இன்று கஞ்சனுாரில் ஆதினம்: தஞ்சை மாவட்டம் கஞ்சனுாரில் உள்ள கோவில் மதுரை ஆதின மடத்துக்கு சொந்தமானது. மதுரை ஆதினகர்த்தர் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் சில நாட்களுக்கு முன் கஞ்சனுார் கோவிலில் நிர்வாக நடைமுறையை மாற்றியுள்ளார். சிலரின் அதிகாரங்களை பறித்ததோடு வேறு சிலருக்கு புதிய பொறுப்புகளையும் கொடுத்துள்ளார். இதனால் கோவில் ஊழியர்கள் சிலர் உள்ளூர் தி.மு.க.வினருடன் சேர்ந்து மதுரை ஆதினகர்த்தருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆதினகர்த்தர் இன்று கஞ்சனுார் கோவிலுக்கு வரும்போது கறுப்பு கொடி காட்ட முடிவு எடுத்துள்ளனர். இந்த தகவல் அறிந்த மதுரை ஆதினகர்த்தர் ஹிந்து அமைப்புகள் முக்குலத்தோர் அமைப்புகளை சேர்ந்தோர் 500 பேரை தன்னுடன் கஞ்சனுார் வரக் கேட்டுள்ளார். அதனால் கஞ்சனுார் பகுதியில் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது. போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளதை தொடர்ந்து மதுரை ஆதினகர்த்தருக்கு உரிய பாதுகாப்பு வழங்க மேலிடத்தில் இருந்து உத்தரவு சென்றுள்ளது. - நமது நிருபர் -