பதிவு செய்த நாள்
09
மே
2022
09:05
பாவங்களிலேயே பெரியது எது என்று கேட்டால், நபிகள்நாயகம்(ஸல்) அவர்கள் கூறியுள்ளதைக் கவனிக்க வேண்டும்.அல்லாஹ்வுக்கு (எவரையேனும்) இணையாக்குதல், தாய் தந்தையர்க்கு மாறுசெய்தல், ஓர் உயிரைக் கொலை செய்தல், பொய் சாட்சியங்கூறல் ஆகியவை பெரும் பாவங்களாகும், என்கிறார்கள் அவர்கள். இறைத்துõதர் அவர்களே! இறைவனிடத்தில் மிகப்பெரிய பாவம் எது? என்று ஒருவர் கேட்டார். உம்மைப் படைத்த இறைவன் ஒருவன் இருக்க, நீர் எவரையேனும் எப்பொருளையேனும், அந்த இறைவனோடு இணை சேர்ப்பது தான், என பெருமானார் அவர்கள் பதிலளித்தார்கள். அடுத்தது எது? என்று மீண்டும் அவர் கேட்கிறார். உண்ணும் உணவிலே பங்குக்கு வந்துவிடுவார்களோ என அஞ்சித் தான் பெற்ற குழந்தைகளைக் கொன்று விடுதல், என்றார்கள். பிறகு என்ன? என்று கேட்கிறார் அந்த மனிதர். உமக்கு அருகில் வசிக்கின்ற அண்டை வீட்டாரின் மனைவியோடு விபச்சாரம் புரிதல், என்கிறார்கள்.மற்றொரு சமயம், அழித்தொழிக்கும் ஏழு கொடிய பாவங்களில் இருந்து உங்களைத் தற்காத்துக் கொள்ளுங்கள், என்று தோழர்களிடம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறிய போது, அவை யாவை? என தோழர்கள் வினவினார்கள். இறைவனுக்கு இணை வைத்தல், சூனியம் செய்தல், அநீதியாகக் கொலை செய்தல், வட்டி வாங்குதல், அநாதைகளின் பொருளை அபகரித்தல், ஜிஹாத் செய்யும்போது போர்க்களத்திலிருந்து பின்னடைந்து ஓடிவிடுதல், மேலும் முஃமினான (இறை நம்பிக்கை உடைய) தனது கற்பைப் பேணிக்காக்கும் வெகுளிப்பெண் மீது விபச்சார பழி சுமத்துதல் ஆகியவை தாம், என்று நாயகம்(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.நாயகம்(ஸல்) அவர்களின் அறிவுரையை ஏற்று, இத்தகைய கொடிய பாவங்களில் இருந்து விடுபட்டு வாழ உறுதியெடுங்கள்.