காரைக்கால்: காரைக்காலில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக விநாயகர் சிலை தயாரிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப். 19ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக விநாகர் சிலைகள் தயாரிக்கும் பணி காரைக்காலில் வேகமாக நடந்து வருகிறது.காரைக்கால் நிரவியில் பா.ஜ., மாவட்ட முன்னாள் தலைவர் சிவசுப்ரமணியன் விநாயகர் சிலை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். பேப்பர் மற்றும் கிழங்கு மாவு கூழ் கொண்டு விநாயகர் சிலை பல பாகங்களாக அச்சில் வார்த்து எடுக்கப்பட்டு, பின் பாகங்கள் இணைத்து இறுதியில் வர்ணம் பூசப்படுகிறது.இங்கு விநாயகர் சிலைகள் 3 அடி முதல் 10 அடி வரை தயாரிக்கப்படுகிறது. சிங்க வாகனம், மூஞ்சுறு, ரிஷப வாகனம், ஆஞ்சநேயர், சிவலிங்கத்தின் மீது விநாயகர் என பல வாகனங்களில் விநாயகர் அமர்ந்திருப்பது போல் சிலை தயாரிக்கப்படுகிறது. காரைக்காலில் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் மற்றும் சீர்காழி சுற்றுவட்டார பகுதியில் விற்பனை செய்யப்படுகிறது.