பதிவு செய்த நாள்
10
மே
2022
04:05
செட்டிபாளையம்: ஒத்தக்கால்மண்டபம் அடுத்துள்ள மயிலேறிபாளையத்தில் மகாலட்சுமி அம்மன் கோவில் உள்ளது. குரும்பர் சமுதாயத்திருக்கு சொந்தமான இக்கோவிலில் சிவன், ஆஞ்சனேயர், ஐயப்பன் சன்னதிகளும் உள்ளன. மாதம்தோறும் பிரதோஷ வழிபாடு, ஆண்டு திருவிழா உள்ளிட்டவையுடன் தினசரி மூன்று வேளை பூஜையும் நடக்கின்றன.
இக்கோவில், 1.19 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இவ்விடம், 1950-ல் ராமசாமி என்பவரின் மனைவி அருக்காணியால் தானமாக வழங்கப்பட்டது. கோவில் பூஜை மற்றும் இதர பணிகளுக்காக, இப்பகுதி இளைஞர்கள் கட்டுமான பொருட்களை வாடகைக்கு விட்டு, வருமானத்தை கோவிலுக்கு வழங்கி வருகின்றனர். இந்நிலையில் இவ்விடம் அரசு புறம்போக்கு நிலம் எனவும், இதனை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, மதுக்கரை தாலுகா தாசில்தார் கோவில் நிர்வாகிகளுக்கு, கடந்த மாதம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று கோவில் இடத்தில் அரசின் அறிவுப்பு பலகை வைக்கப்படும் என தகவல் பரவியது. இதையடுத்து, சாலை மறியல் செய்ய ஆண், பெண் என, நூற்றுக்கும் மேற்பட்டோர் கோவில் வளாகத்தில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் இரவு வரை அரசு அதிகாரிகள் யாரும் வரவில்லை. கோவில் அறக்கட்டளை தலைவர் கோவிந்தராஜ் கூறுகையில், " இக்கோவில் மிக பழமையானது. கோவில் நிலம் தானமாக தரப்பட்டது. ஆனால், வருவாய் துறையினர் ஒரு அமைப்பை சேர்ந்தவர்கள் புகார் மனு கொடுத்ததாக கூறுகின்றார். மேலும் அரசுக்கு சொந்தமானது என கூறி, கையகப்படுத்த முயலுகின்றனர். எங்களிடம் உள்ள ஆவணங்களை கொடுத்துள்ளோம். மீறி கையகப்படுத்தினால் போராட்டம் நடத்துவோம்" என்றார்.