பதிவு செய்த நாள்
10
மே
2022
04:05
காரைக்குடி: காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோயில் திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.
கொப்புடையநாயகி அம்மன் கோயில் திருவிழா மிகப் பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவிழா நடக்கவில்லை. இந்தாண்டு திருவிழா, இன்று காலை 6.29 மணிக்கு மேல் காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. முதல் நாளான இன்று இரவு 9 மணிக்கு அம்மன் வெள்ளி சிம்ம வாகனத்தில் எழுந்தருளுகிறார். 2வது நாள் இரவு காமதேனு வாகனத்திலும், 3வது நாள் இரவு அன்ன வாகனத்திலும், 4 வது நாள் கைலாச வாகனத்திலும், 5 வது நாள் வெள்ளி ரதத்திலும், 6வது நாள் வெள்ளி ரிஷிப வாகனத்திலும், 7வது நாள் வெள்ளிக் குதிரை வாகனத்திலும் அம்பாள் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 8 வது நாளான மே 17 ஆம் தேதி காலை 8.13 மணிக்கு மேல் திருத்தேருக்கு அம்பாள் எழுந்தருளளும், மாலை 5 மணிக்கு தேரோட்டமும், தொடர்ந்து காட்டம்மன் கோவிலுக்கு அம்பாள் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 9வது நாள் மே 18 ஆம் தேதி கோயிலுக்கு அம்மன் திரும்புதல் நிகழ்ச்சியும், 10 வது நாளில், யானை வாகனத்தில் அம்மன் எழுந்தருளல் நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு தெப்பத் திருவிழாவும், அதிகாலை புஷ்ப பல்லாக்கு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.