பதிவு செய்த நாள்
12
மே
2022
04:05
கருமத்தம்பட்டி: இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, கோவில்களில் திருவிழா நடப்பதால், பக்தர்கள் பரவசத்துடன் பங்கேற்றனர்.
சூலூர் வட்டாரத்தில் உள்ள கிராம கோவில்களில் ஆண்டு தோறும் பங்குனி, சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் பண்டிகை சாட்டி, திருவிழா கொண்டாடுவது வழக்கம். கடந்த இரு ஆண்டுகளாக, கொரோனா ஊரடங்கால், திருவிழாக்கள் நடக்கவில்லை. இதனால், பக்தர்கள் வேதனையடைந்தனர். இந்நிலையில், தொற்று குறைந்ததால், கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. அதனால், இந்தாண்டு, அனைத்து கிராமங்களிலும் பண்டிகை சாட்டப்பட்டு திருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கருமத்தம்பட்டி அடுத்த வேட்டைக்காரன் குட்டை முத்துமாரியம்மன் கோவிலில், கடந்தவாரம் பண்டிகை துவங்கியது. அதேபோல், சோளக்காட்டுப் பாளையம் மாகாளியம்மன் கோவிலும் பண்டிகை சாட்டப்பட்டது. தினமும், அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. பக்தர்கள் கம்பம் சுற்றி ஆடி மகிழ்ந்தனர். பூவோடு எடுத்தல், மாவிளக்கு மற்றும் பொங்கல் வைத்து வழிபட்டனர். இன்று மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.