மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், சுக்ல பக்ஷ ஏகாதசி விழா நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கோவை மாவட்டத்தில் உள்ள வைணவ ஸ்தலங்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவில் ஆகும். ஒவ்வொரு மாதமும் கோவிலில் ஏகாதசி விழா சிறப்பாக நடைபெறும். சுபக்ருது வருஷம் சித்திரை மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி வழிபாடு இன்று சிறப்பாக நடந்தது. காலையில் கோவில் நடை திறந்து மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், காலசந்தி பூஜைகள் நடந்தன. ஸ்ரீதேவி, பூதேவி, சமேதராக அரங்கநாத பெருமாள் மண்டபத்தில் எழுந்தருளினார். சுவாமிக்கு புண்ணிய வசனம், கலச ஆவாஹனம், ஸ்தபன திருமஞ்சனம் ஆகிய பூஜைகள் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம் அரங்கநாத பெருமாள் கோவில் வளாகத்தில் வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.