பதிவு செய்த நாள்
13
மே
2022
10:05
திருச்சி : திருச்சி, மலைக்கோட்டை கோவிலில், தாயுமானவர் சுவாமி, மட்டுவார்குழலி அம்மை சித்திரை தேரோட்டம் நடைபெற்றது.
தென் கயிலாயம் என போற்றப்படும், திருச்சி, மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படும்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த 2 ஆண்டுகள் தேர்த் திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு சித்திரை தேர் திருவிழா, கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, தினமும், சுவாமி, அம்பாள் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா சென்றனர். கடந்த 9ம் தேதி செட்டிப் பெண்ணுக்கு சிவபெருமான் பெண்ணாக வந்து, பிரசவம் பார்த்து தாயுமானவரான நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 10ம் தேதி திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு, நுாறு கால் மண்டபத்தில், தாயுமானவர் சுவாமி, மட்டுவார்குழல் அம்மையாருடன் எழுந்தருளினார். சிறப்பு யாகங்களை தொடர்ந்து, வேதமந்திரங்கள் முழங்க, மங்கள இசை ஒழிக்க தாயுமானவர், மட்டுவார்குழல் அம்மை திருக்கல்யாண வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், திருக்கல்யாண உற்சவத்தை தரிசித்தனர். இன்று காலை, சுவாமியும், அம்பாளும் திருத்தேரில் எழுந்தருளிய பின், காலை 6 மணிக்கு சித்திரை தேரோட்டம் துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.