பதிவு செய்த நாள்
13
மே
2022
04:05
சென்னை:முதியோர் இல்லங்கள் துவங்க, கோவில் உபரி நிதியை தற்போது பயன்படுத்த மாட்டோம் என, சென்னை உயர் நீதிமன்றத்தில், அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு:சென்னை, பழநி, திருநெல்வேலி ஆகிய நகரங்களில், கோவில் சொத்துக்களில் இருந்து முதியோர் இல்லங்கள் அமைக்க, அரசு ஒப்புதல் வழங்கி, 2022 ஜனவரியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பழநி தண்டாயுதபாணி கோவில் நிதியில் 15.20 கோடி ரூபாய், திருநெல்வேலி காந்திமதி - நெல்லையப்பர் கோவில் நிதியில் 13.50 கோடி ரூபாய், சென்னை, வில்லிவாக்கம் ஸ்ரீதேவி பாலியம்மன், இளங்காளியம்மன் கோவில் நிதியில் இருந்து 16.30 கோடி ரூபாய் பயன்படுத்த, அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.இந்த மூன்று கோவில்களிலும், அறங்காவலர்கள் குழு நியமிக்கப்படவில்லை. பல ஆண்டுகளாக, தக்கார் மற்றும் நிர்வாக அதிகாரிகள் தான் பதவியில் உள்ளனர். அறங்காவலர்கள் இல்லாமல், கோவில்கள் மற்றும் அதன் சொத்துக்கள் தொடர்பாக, பெரிய அளவிலான முடிவுகளை எடுக்க முடியாது.உபரி நிதியை பயன்படுத்த, விதிமுறைகள் உள்ளன. அதன்படி, அறங்காவலர் தான் அதற்கான திட்டத்தை பரிந்துரைக்க முடியும். அரசு முதலில் வெளியிட்ட அறிவிப்பில், 5 கோடி ரூபாய்க்கான திட்டம் என குறிப்பிட்டிருந்தது. ஆனால், அரசு உத்தரவில், 45 கோடி ரூபாய்க்கு மேல் வருகிறது.எனவே, 2022 ஜனவரியில் பிறப்பித்த உத்தரவை, ரத்து செய்ய வேண்டும்; உத்தரவு தொடர்பான நடவடிக்கைக்கு, தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் நிரஞ்சன் ஆஜரானார்.அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, அறங்காவலர்கள் நியமனத்துக்காக குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த மனுவுக்கு, விரிவான பதில் மனு தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், அறங்காவலர்கள் இன்றி எப்படி கோவில் நிதியை பயன்படுத்த முடியும்? எத்தனை ஆண்டுகளாக அறங்காவலர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர்? என கேட்டனர்.மனுவுக்கு பதில் அளிக்க அவகாசம் வழங்கவும், அதுவரை கோவில் நிதியை பயன்படுத்த மாட்டோம் எனவும், அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து விசாரணையை, ஆறு வாரங்களுக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.